வரலாற்றை உலுக்கிய ஆதித்த கரிகாலன் கொலை! ஆயிரம் ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சு!

வரலாற்றை உலுக்கிய ஆதித்த கரிகாலன் கொலை! ஆயிரம் ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சு!
வரலாற்றை உலுக்கிய ஆதித்த கரிகாலன் கொலை! ஆயிரம் ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சு!

அமரர் கல்கியின் காவியத்தை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். “பொன்னியின் செல்வன்” அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு படமாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன்.

கதையின் பெயரில் வரும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரம் வேறு யாருமல்ல., ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ தேசத்தை ஆண்ட, தஞ்சை பெரிய கோயிலை கட்டியெழுப்பிய ராஜராஜன் தான்., அரசராக பதவியேற்க அவர் அரசன் சுந்தர சோழனின் மூத்த மகனா என்றால்... இல்லை! அவர் இளைய மகன்தான். அப்படியென்றால் மூத்த மகன் யார்? அதுதான் ஆதித்த கரிகாலன்! அவர் ஏன் அரசராக பதவியேற்கவில்லை? இந்த கேள்வியில் தான் பொன்னியின் செல்வனின் உயிர்மூச்சே அடங்கி இருக்கிறது. அடுத்த அரசராக பதவியேற்க இருந்த நிலையில்தான் ஆதித்த கரிகாலன் திடீரென கொலை செய்யப்பட்டார். ஆனால் அவரை யார் கொலை செய்தது என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது. கல்கியும் தனது நாவலில் இக்கேள்வியை பதிலளிக்காமல் தான் கடந்திருப்பார்.

ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார்?

கடம்பூரில் உள்ள சம்புவரையர் மாளிகையில் தான் அந்தக் கொலை நிகழும். கல்கியில் நாவலில் வரும் ஆகச் சிறந்த கற்பனை கதாபாத்திரமான “நந்தினி”யை பார்க்கச் செல்வார் ஆதித்த கரிகாலன். அதே அறையில் யாழ் களஞ்சியத்தில் வந்தியத் தேவனும், அவருக்கு பின் பழுவேட்டரையரும் ஒளிந்திருப்பர். பாண்டிய நாட்டின் ஆபத்துதவிகளான ரவிதாசன், இடும்பன்காரி ஆகியோர் வேட்டை மண்டபத்தில் கரிகாலனைக் கொல்ல நந்தினியின் அழுகை சமிஞைக்காக காத்திருப்பர். கடைசியாக வந்தியத்தேவனின் அறைக்கு பின்பக்கம் உள்ள அறையில் அவனைக் காதலித்த மணிமேகலை ஒளிந்திருப்பாள்.

கொலை எப்படி நடக்கும்?

நந்தினிக்கும் கரிகாலனுக்கும் மிகப்பெரிய வார்த்தை யுத்தமே நடக்கும். நந்தினி தன் பிறப்பின் ரகசியத்தை போட்டு உடைப்பாள். தான் பாண்டிய மன்னனின் மகள் என்பதை கூறிவிட்டு ஓவென்று கதறி அழுவாள். அப்போது வந்தியத்தேவன் எழுந்து கரிகாலனை நோக்கிச் செல்ல முற்படும்போது பழுவேட்டரையர் அவனைப் பிடித்து தாக்குவர். அந்த தாக்குதலில் அவன் மயக்கமாகி விடுவான். அறை வெளிச்சம் ஏதுமின்றி திடீரென இருளாகும். மீண்டும் விளக்குகள் சுடர்விடும்போது சோழ நாட்டின் ஒளி அணைந்திருக்கும். ஆதித்த கரிகாலன் மரித்திருப்பார். ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டிருப்பார். யார் கொன்றது அவரை?

வந்தியத் தேவனா?

ஆதித்த கரிகாலனின் நண்பனான வந்தியத்தேவன் அவரது வேண்டுகோளை ஏற்றுதான் சோழ அரண்மனைக்குள் நுழைந்திருப்பார். அவர் மீதுதான் கொலைப்பழி விழும். ஆனால் கொலை நடைபெற்ற அந்த தருணம் அவர் பழுவேட்டரையரால் தாக்கப்பட்டு மூர்ச்சையாகியிருப்பார். ஆக கொலை நடந்தது கூட அவருக்கு தாமதாக தான் தெரியவரும். ஆதலால் அவர் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று கல்கி நிரூபித்து இருப்பார்.

பழுவேட்டரையரா?

ஆதித்த கரிகாலன் கடைசியாக பேச வந்தாரே., அந்த நந்தினி! அது வேறு யாருமல்ல! பழுவேட்டரையரின் மனைவிதான்! தன் மனைவி தன்னை இத்தனை காலம் ஏமாற்றிய விவகாரத்தை முழுமையாக அறிந்து அவர் மீதான கொலை வெறியோடுதான் அந்த அறைக்கு வந்திருப்பார் பழுவூரார். ஆனால் ஆதித்த கரிகாலனை அவர் கொல்ல அவருக்கு பெரிய நோக்கம் எல்லாம் இருக்காது என்பதால் அவரையும் கொலையாளி பட்டியலில் இருந்து தூக்கி இருப்பார் கல்கி.

ஆனால் வந்தியத் தேவன் மீது பழி விழுந்தபோது, அவன் கொலை செய்யவில்லை என்பதை முழுமையாக அறிந்த ஒரே நபர் பழுவூரார்தான். ஏனென்றால் அவனை தாக்கி மூர்ச்சையாக்கியதே அவர்தான் அல்லவா? அதனால் நான் தான் கொலை செய்தேன் என்று சோழ சபையில் பழியை ஏற்க முன்வந்திருப்பார். ஆனால் கொலைக்கான நோக்கம் அடிபட்டு போகவே அவரை கொலையாளியாக சபை ஏற்காமல் நிராகரித்து இருக்கும்.

மணிமேகலையா?

வந்தியத் தேவன் மீது பழி விழுந்தபோது அதை ஏற்க பழுவேட்டரையர் மட்டும் முன்வரவில்லை. அதையும் மீறி ஒரு குரல் உரக்க ஒலித்திருக்கும். அது மணிமேகலை! அது அவன் மீது இருக்கும் காதலால் ஒலித்த குரல். இத்தனைக்கும் அது ஒருதலை காதல்தான். ஆனால் பழுவூராருக்கு சொன்ன அதே நோக்கம் இல்லாத தன்மை அப்படியே மணிமேகலைக்கும் பொருந்தும் என்பதால் கல்கி மணிமேகலை மீது களங்கம் ஏற்பட அனுமதித்து இருக்க மாட்டார்.

நந்தினியா?

கரிகாலனை கொலை செய்யும் தூரத்தில் அந்த அறையில் இருந்த ஒரே ஆள் நந்தினி மட்டும்தான். கல்கியும் இதை கவனமாக சொல்லி இருப்பார். ஆனால் திட்டப்படி நந்தினி ஓவென்று அழுதிருப்பார். அதன் அர்த்தம் கொலை செய்ய ரவிதாசனை அழைப்பதற்காக சமிஞை விடுக்கப்பட்டது என்பதுதான். கொலை செய்ய ஒருவர் வரும்போது ஏன் வேண்டும் என்று அவரே கொலை செய்ய வேண்டும்? இந்த கேள்விதான் நந்தினியை சந்தேக எல்லையை விட்டு சற்று வெளியே நகர்த்துகிறது.

ஆனால் மற்றவர்களுக்கு ஒரு “நோக்கம்” சொல்லப்படாமல் போனதே! அந்த நோக்கம் நந்தினிக்கு உண்டு! நந்தினியின் தந்தையான பாண்டிய மன்னனை தலையை வெட்டி அவள் கண்முன்னே கொன்றது வேறு யாருமல்ல! ஆதித்த கரிகாலன் தான்!. அவன் பெயரே வீர பாண்டியன் தலைகொண்ட கோப்பரசேரி ஆதித்த கரிகாலன் தான். இப்படி இருக்கையில், தன்னுடைய தந்தையை கொன்றவனை கொலை செய்ய நந்தினி ஏன் வாளேந்தி இருக்கக் கூடாது? இந்த கேள்வி நமக்கு எழுகிறதல்லவா? கல்கிக்கும் எழுந்திருக்குமோ என்னவோ? நந்தினி கொலை செய்யவில்லை என்று நாவலில் ஒரு இடத்தில் கூட சொல்லவே இல்லை!

ரவிதாசனா?

கொலை செய்ய அழுகைச் சமிஞையை நந்தினி கொடுத்தாகி விட்டது. மீண்டும் வெளிச்சம் வரும்போது கரிகாலனின் பூத உடல்தான் அந்த அறையில் கிடந்தது. இடையில் பாண்டிய நாட்டின் ஆபத்துதவிகளான ரவிதாசன், இடும்பன்காரி ஆகியோர் வந்து கரிகாலனை கொன்றதற்கு ஒரு சாட்சி கூட கிடையாது. ஆனால் அவர்கள் கொல்வதற்கான எல்லா வாய்ப்புகளும் கொலை செய்ய அவர்களுக்கு வலுவான நோக்கமும் இருந்தது என்பதை கல்கி அடிக்கோடிட்டு இருப்பார்.

தற்கொலையா?

அந்த அறையில் நுழையும்போது கரிகாலன் தனது வாளோடுதான் நுழைந்திருப்பார். காதலியாக நினைக்கும் பெண்ணை பார்க்க ஏன் அவர் வாளோடு வந்தார்? வந்த இடத்தில் வாக்குவாதம் தான்., இறுதியாக நந்தினி பாண்டிய மன்னனின் மகள் என்ற அதிர்ச்சி உண்மை வெளியான போது தனது வாளால் வெட்டிக்கொண்டு ஏன் அவர் தற்கொலை செய்திருக்கக் கூடாது? இந்த கேள்விகளின் பக்கம் கல்கி சென்றிருக்க மாட்டார். தற்கொலை செய்யும் அளவு கோழைக் கதாபாத்திரமாக ஆதித்த கரிகாலனை உருவாக்கி இருக்க மாட்டார் கல்கி.

அப்படி என்றால் யார் தான் கொலை செய்தது?

இந்தக் கேள்விக்கு இன்று வரை தெளிவான விடை கிடைக்கவில்லை என்பதே உண்மை. கல்கியும் இதன் காரணமாகவே கொலையாளி இவர்தான் என்று யாரையும் கைகாட்டி இருக்கமாட்டார். ஆனால் கொலைக்கு உதவியவர்கள் என்ற வகையில் ரவிதாசன் உள்ளிட்ட பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுக்கு தண்டனையை வழங்கி இருப்பார் ராஜ ராஜ சோழன். அந்த தண்டனை சோழ நீதி வரலாற்றில் கொடுக்கப்பட்ட புதுவிதமான தண்டனை.

உடையார்குடி கல்வெட்டில் இப்போதும் காணக் கிடைக்கிறது அந்த தண்டனை., அப்படி என்ன அது என்று கேட்டால் சிம்பிளாக சொல்லி விடலாம். சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி கிராமத்தை காணாமல் ஆக்கிய அரசு அதிகாரிகளுக்கு அஜித் வழங்கச் சொல்வாரே அந்த தண்டனை தான் அது! நாட்டுக்குள்ளேயே நாடற்றவர்களாக்கும், சொந்த பந்தம் சூழ அநாதையாக்கும் விநோத தண்டனை., அப்படத்தின் வசனகர்த்தா பாலகுமாரனும் ராஜராஜ சோழனின் கதையை “உடையார்” என்ற பிரமாண்ட நாவலாக எழுதியிருப்பார், அவர்தான் இந்த விநோத தண்டனையை கதைக்குள் புத்திசாலித்தனமாக நுழைத்திருப்பார்.

கொலை செய்திருந்தால் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கும், ஆனால் நேரடி சாட்சி ஏதும் இல்லாததால் அதிகபட்ச தண்டனையாக இது வழங்கப்பட்டதாக சொல்லப்படுவது உண்டு. இதில் இன்னொரு தரப்பு வாதமும் முன் வைக்கப்படுகிறது. கொலை குற்றம்சாட்டப்பட்ட ரவிதாசன், சோமன், பரமேஸ்வரன் ஆகிய மூவரும் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதனால், அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் பட்சத்தில் அதனால் நிறைய எதிர்வினை ஏற்படும் என்பதால் அதனை அவர் தவிர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகளாக அவிழாத மர்மம்!

சரி கொலை செய்தது யார்? தெரியாது., ஆயிரம் ஆண்டுகளாக விடை தெரியாமல் தொக்கி நிற்கும் கேள்வி அது? தனது “ஆதித்ய” கரிகாலன் கதாபாத்திரத்தில் இக்கொலையை எப்படி கையாண்டு இருக்கிறார் மணிரத்னம் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com