எனக்கு கொரோனா என்று பி.சி.ஆர் கிட் தவறாக காட்டியது: சிரஞ்சீவி குற்றச்சாட்டு!
மருத்துவக்குழுவினர் தற்போது மேற்கொண்ட மூன்றுவிதமான பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதாகவும், இதற்குமுன்பு எடுத்த சோதனையில் பி.சி.ஆர் கிட் கொரோனா பாஸிட்டிவ் என்று தவறாக காட்டியதாகவும் நடிகர் சிரஞ்சீவி பரப்பரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் சிரஞ்சீவி கடந்த 9 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில், கொரோனா சோதனை செய்தபோது தொற்று உறுதியானது. ஆனால், எனக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். கடந்த நான்கைந்து நாட்களாக என்னை சந்தித்த அனைவரையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்” அக்கறையுடன் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் உடல்நிலை சரியாக ரசிகர்களும் திரைத்துறையினரும் அக்கறையோடு விசாரித்துவந்த நிலையில், நேற்றிரவு தனது ட்விட்டர் பக்கத்தில், ”கொரோனா பாஸிட்டிவ் வந்ததும் மூன்று வெவ்வேறு டாக்டர்கள் குழு எனக்கு கொரோனா பரிசோதனைகளை செய்தார்கள். ஆனால், மூன்று பரிசோதனைகளிலும் நெகட்டிவ் என்று வந்தது. முன்பு பரிசோதனை செய்த ஆர்.டி - பி.சி.ஆர் கிட் எனக்கு கொரோனா பாஸிட்டிவ் என்று தவறாகக் காட்டியுள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் அனைவரும் காட்டிய அக்கறைக்கு நன்றி” என்று எச்சரிக்கையோடு பதிவிட்டுள்ளார். சிரஞ்சீவியின் இந்தக்குற்றச்சாட்டு பொதுமக்களை மட்டுமல்ல மருத்துவத்துறையினரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியிருக்கிறது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சினிமா துறையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். அரசியல் ஆர்வம் ஏற்பட்டதால், கடந்த 2008-ஆம் ஆண்டு பிரஜா ராஜ்யம் கட்சியை ஆரம்பித்து திருப்பதி தொகுதியின் எம்.எல்.ஏவும் ஆனார். பின்னர், கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
அரசியல்வாதியாக இருந்தாலும் சிரஞ்சீவி படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ’சைரா நரசிம்ம ரெட்டி’ வெளியானது. நயன்தாரா, தமன்னா ஜோடியாக நடித்தார்கள்.