இதுவும் ’Pan-India’ திரைப்படங்கள்தான்..பாலிவுட்டை தாண்டி தெறிக்கவிடும் தென்னிந்திய சினிமா!

இதுவும் ’Pan-India’ திரைப்படங்கள்தான்..பாலிவுட்டை தாண்டி தெறிக்கவிடும் தென்னிந்திய சினிமா!
இதுவும் ’Pan-India’ திரைப்படங்கள்தான்..பாலிவுட்டை தாண்டி தெறிக்கவிடும் தென்னிந்திய சினிமா!

இந்திய சினிமாவாக இந்தி சினிமாவே முன்னிறுத்தப்பட்டதாகவும் தென்னிந்தியத் திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி கடுமையாக சாடியுள்ளார்.

சிரஞ்சீவியும் அவரது மகன் ராம்சரணும் இணைந்து நடித்துள்ள 'ஆச்சார்யா' திரைப்படத்தின் அறிமுக விழா நடைபெற்றது. அதில் பேசிய சிரஞ்சீவி, 1988-ம் ஆண்டு 'ருத்ரவீணை' திரைப்படத்துக்காக நர்கிஸ் தத் விருதைப் பெற டெல்லி சென்றிருந்தபோது அவமானத்தை சந்தித்ததாக குறிப்பிட்டார். நிகழ்ச்சியின் தேநீர் விருந்தின்போது, இந்திய சினிமா குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததாகவும், அவற்றில் இந்தி திரையுலக நட்சத்திரங்களின் படங்களே அணிவகுத்ததாகவும் சிரஞ்சீவி கூறினார்.

அவர்களின் ஒவ்வொரு படமும் சுட்டிக்காட்டப்பட்டு அழகாக வர்ணிக்கப்பட்டதாகவும் அவர் நினைவுக் கூர்ந்தார். ஆனால், தென்னிந்திய திரையுலகில் எம்ஜிஆர் - ஜெயலலிதா மற்றும் பிரேம் நசீர் ஆகியோரின் படங்கள் தவிர, சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், விஷ்ணுவர்தன் உள்ளிட்ட கலைஞர்களின் படங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்ததாக சிரஞ்சீவி குறிப்பிட்டார். ஆனால், தற்போது ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ உள்ளிட்ட திரைப்படங்கள், மொழி என்ற தடைகளை உடைத்தெறிந்து பெருமையடையச் செய்திருப்பதாக சிரஞ்சீவி பெருமிதத்துடன் கூறினார்.

இந்தி ஆதிக்கம் குறித்து ஏற்கனவே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கன்னட நடிகர் கிச்சா சுதீப் உள்ளிட்டோர் குரல் எழுப்பிய நிலையில், சிரஞ்சீவியும் எதிர்ப்புக் குரலை எழுப்பியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், இந்தி இல்லாத பிறமொழி திரைப்படங்களும் பான் இந்தியா திரைப்படமாக அண்மையில் வெற்றி அடைந்திருக்கின்றன. எந்தெந்த படங்கள் என்று பார்க்கலாம். பல மொழி திரைப்படங்களை உள்ளடக்கியதே இந்திய சினிமா. ஆனால், இந்தி மொழி படங்களே, பான் இந்தியா திரைப்படங்களாக பார்க்கப்பட்டு வந்தன.

அந்த நிலை மாறி, பிறமொழி திரைப்படங்களுக்கும் பான் இந்தியா அங்கீகாரத்தை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். இதற்கு தெலுங்கில் உருவான ‘பாகுபலி’ படமே உதாரணம். இதனைத்தொடர்ந்து, சமீபத்தில் வெளியான பிறமொழி திரைப்படங்கள் சில, பான் இந்தியா படமாக பார்க்கப்பட்டன. அதில், ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தந்தது.

தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படமும் வெற்றி பெற்று பான் இந்தியா திரைப்படமாக மகுடம் சூடியது. கன்னட நடிகர் யஷின் ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம், கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளையும் கடந்து, ஹிந்தியிலும் மிகப் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது.

இதேபோல, ஓடிடியில் தமிழில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படமும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை பற்றி பேசிய ‘ஜெய்பீம்’ திரைப்படமும் விமர்சன ரீதியாக இந்திய ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. திருமணமாகி செல்லும் வீட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசிய திரைப்படம், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. மலையாளத்தில் உள்ளூர் ஓடிடியில் வெளியான இப்படம் அனைவராலும் பெரிதளவில் பேசப்பட்டது. இதேபோல, கன்னடத்தில் வெளியான ‘கருடா கமனா வ்ரிஷப வாஹனா’ திரைப்படமும் அனைத்து மொழி மக்களும் பேசும் படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com