“எனக்கு ஆதரவு தருவதைபோல பாலியல் ரீதியாக பேசினார்” - கொதிக்கும் பாடகி சின்மயி

“எனக்கு ஆதரவு தருவதைபோல பாலியல் ரீதியாக பேசினார்” - கொதிக்கும் பாடகி சின்மயி

“எனக்கு ஆதரவு தருவதைபோல பாலியல் ரீதியாக பேசினார்” - கொதிக்கும் பாடகி சின்மயி
Published on

இன்றைய இணைய உலகம் எந்த அளவிற்கு நம் வாழ்க்கையை எளிதாக்கி உள்ளதோ அதே அளவிற்கு எதிர்மறையான விஷயங்களையும் உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக இணையம் மூலமாக பெண்கள் அடையும் மன உளைச்சல்கள் ஏராளம். பாலியல் ரீதியாகவும் பெண்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதே இணையம் மூலம் பெண்கள் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன்றனர். சமீப நாட்களாக   #metoo என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்தும் இணையத்தில் கொடுக்கப்படும் மன உளைச்சல்கள் குறித்தும் தைரியமாக பெண்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.  

இந்நிலையில் பாடகி சின்மயி, சிறு வயதில் தான் சந்தித்த பாலியல் ரீதியிலான சீண்டல்கள் குறித்த தன்னுடைய அனுபவத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் '' பெண்களை தவறான மனநிலையில் தொட்டுப்பேசுதல், அணைத்தல் போன்றவை பார்க்க சாதாரணமாக இருந்தாலும், மனதளவில் அவர்களை பயம்கொள்ளச்செய்பவை'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ''எனக்கு 8 அல்லது 9 வயது இருக்கும்.  என் அம்மா ஸ்டூடியோ ஒன்றில் ரெக்கார்டிங் மேற்பார்வையில் இருந்தார். தூங்கிக்கொண்டிருந்த போது என்னை யாரோ தொடுவதாக உணர்ந்தேன். அது குறித்து எனது அம்மாவிடமும் புகார் அளித்தேன்'' என தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ''என்னுடைய 10 அல்லது 11 வயதில் டிசம்பர் மாத இசை கச்சேரி நடந்தது. அதில் ஒரு பெரியவர் என்னுடைய தொடைகளை கிள்ளிக்கொண்டே இருந்தார்'' என்றும் தன்னுடைய கசப்பான அனுபவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

சிறு வயது அனுபவங்கள் மட்டுமில்லை தற்போதைய இணையம் மூலமாக தான் அனுபவித்து வரும் இணைய பாலியல் சீண்டல் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். இணையம் மூலம் தனக்கு பாலியல் சீண்டலும், மிரட்டலும் வருவதாகவும் சிலர் தன் மீது தவறு இருப்பதைபோல கதை சொல்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அதில் ''ஒருவர் எனக்கு கருத்து ரீதியாக ஆதரவு தருவது போல் பேசி பாலியல் ரீதியாக பேசினார். டார்லிங் என்றும் ஸ்வீட் ஹார்ட் என்றும் அவர் வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கினார். உடனடியாக நான் அவரை தவிர்த்துவிட்டேன். அதற்குப் பிறகு அவர் எனக்கு எதிரான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்'' என்றும் தெரிவித்துள்ளார்.

சின்மயி தன் ட்விட்டர் பக்கத்தில் வேறு ஒரு பெண்ணின் அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் ''நீங்கள் குறிப்பிடுபவர் என்னிடம் தவறான எண்ணத்தில் பேசியுள்ளார். நான் திருமணமானவள் என்றும், வயதில் மூத்தவள் என்றும் கூறி அவரை சகோதரர் என்று அழைத்தேன். அதற்கு அவர் சகோதரர் என்று அழைக்க வேண்டாமெனக்கூறி நான் அழகாக இருப்பதாக கூறினார். ஆரம்பத்தில் அவரை நான் செலிபிரிட்டி என்று நினைத்து பேசினேன். ஆனால் அவர் நல்ல குணம் படைத்தவரில்லை எனத் தெரியவந்ததும் அவரை தவிர்த்தேன்'' என்று கூறியுள்ளார்.

சினிமா, பத்திரிகை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சேர்ந்த பெண்களும் தங்களது பாலியல் சீண்டல்கள் குறித்த அனுபவங்களை தினம் தினம் ட்விட்டரில் பகிர்ந்து வரும் நிலையில், பாடகி சின்மயின் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகப்பேரால் பேசப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com