அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் படத்தை சீன அதிபர் ஜீ ஜின்பிங் பார்த்து ரசித்துள்ளார்.
இந்த தகவலை வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்ஷங்கர் தெரிவித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானா சென்றுள்ள பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இந்திய சினிமா துறைக்கு ஜி ஜின்பிங் பாராட்டு தெரிவித்ததாகவும் ஜெய்ஷங்கர் தெரிவித்தார்.
மல்யுத்த போட்டியைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தங்கல் திரைப்படம் சமீபத்தில் சீனாவில் வெளியிடப்பட்டது. அமீர்கானின் தங்கல் படத்துக்கு சீன மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர். இதனால் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சீனாவில் எந்தவொரு இந்திய படமும் செய்யாத சாதனையை தங்கல் செய்தது. இந்த படம் குறித்து சீனாவின் அரசியல் பிரபலங்கள் பலரும் சிலாகித்து பேசிவருகின்றனர். தங்கல் படத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங்க்கும் பார்த்து ரசித்துள்ளார்.