‘செலோ ஷோ’ படம் வெளியாகும் முன்பே புற்றுநோயால் பலியான 10 வயது குழந்தை நட்சத்திரம்!

‘செலோ ஷோ’ படம் வெளியாகும் முன்பே புற்றுநோயால் பலியான 10 வயது குழந்தை நட்சத்திரம்!
‘செலோ ஷோ’ படம் வெளியாகும் முன்பே புற்றுநோயால் பலியான 10 வயது குழந்தை நட்சத்திரம்!

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத்தி படமான ‘செலோ ஷோ’ திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களில் ஒருவரான ராகுல் கோலி என்ற 10 வயது சிறுவன் புற்றுநோயால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் சிறந்த வெளிநாட்டு அல்லது சர்வதேச திரைப்படம் என்றப் பிரிவில் ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் ஒரு படம் பரிந்துரை செய்யப்படும். அதற்கு, இந்தியாவில் வெளியானப் படங்களை தேர்வு செய்யும் பணி கடந்த மாதம் நடந்து வந்தது. அதில் குஜராத்திப் படமான 'செலோ ஷோ' (தி லாஸ்ட் ஷோ) தேர்வு செய்யப்பட்டு, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் 95-வது ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அனுப்பப்படவுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியானபோது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை தேர்வு செய்யாமல், ‘செலோ ஷோ’ (தி லாஸ்ட் ஷோ) படத்தை தேர்வு செய்ததால் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது.

மேலும், கடந்த 1988-ம் ஆண்டு வெளியான 'சினிமா பாரடைசோ' படத்தின் காப்பி தான் 'செலோ ஷோ’ என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் இந்தப் படத்தில் 6 சிறுவர்களில் ஒருவராக நடித்த ராகுல் கோலி என்ற 10 வயது சிறுவன் ரத்த புற்றுநோயால் உயிரிழந்துள்ளான். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்ற இந்த திரைப்படம், வருகிற வெள்ளிக்கிழமை குஜராத் உள்பட சில மாநிலங்களில் குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. ஆனால் அதற்குள் ராகுல் கோலி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2-ம் தேதி காலை உணவுக்குப் பின் தொடர்ந்து காய்ச்சல் நிலவியநிலையில், 3 முறை ரத்த வாந்தி எடுத்துள்ளார் குழந்தை நட்சத்திரமான ராகுல் கோலி. அதன்பின்பு உயிரிழந்துவிட்டதாக அவனின் தந்தையும் ரிக்ஷா தொழிலாளியுமான ராமு கோலி தெரிவித்துள்ளார். ராமு கோலியின் குடும்பத்தில் 3 குழந்தைகள் உள்ளநிலையில், ராகுல் கோலிதான் மூத்த மகன். ‘செலோ ஷோ’ படம் வெளியானதும் தங்களது ஏழ்மை வாழ்க்கை மாறிவிடும் என்று அடிக்கடி குழந்தை நட்சத்திரத்திமான ராகுல் கோலி வீட்டில் தெரிவித்து வந்ததாக அவனது தந்தை ராமு கோலி உருக்கமாக கூறியுள்ளார்.

அத்துடன் குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து வருகிற 14-ம் தேதி படம் பார்க்க எண்ணியிருந்த நிலையில், ராகுல் கோலி உயிரிழந்துள்ளான். எனினும், அவனது இறுதி சடங்கு நிகழ்ச்சிக்குப் பிறகு, படத்தை பார்க்க இருப்பதாகவும் சிறுவனின் தந்தை ராமு கோலி தெரிவித்துள்ளார். இந்தப் படம் நிறைவடைந்ததுமே புற்றுநோய் அறிகுறிகள் ராகுல் கோலிக்கு தென்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 4 மாத காலமாகவே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் சிறுவன் ராகுல் கோலியை காப்பாற்ற முடியவில்லை என்று ‘செலோ ஷோ’ படத்தின் இயக்குநர் பான் நலின் தெரிவித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் ராகுல் கோலி இந்தப் படத்தில் மனு என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தான். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com