“எங்களை ஒன்றும் செய்ய முடியாது”- சென்னையில் பிரியாணி கடையை சூறையாடிய கும்பல்
சென்னையில் பிரியாணி கடையை சூறையாடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தை அடுத்த தலைமைச் செயலக காலனி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் கீழ்ப்பாக்கம் டேங்க் ரோடு பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அந்தக் கடையின் உரிமையாளர் வெங்கடேசன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த குப்பன், ராஜேஷ் என்பவருக்கும் இடையே சில பிரச்னைகள் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் பிரியாணி கடைக்கு வந்த 50க்கும் மேற்பட்டோர் தாங்கள் குப்பன், ராஜேஷ் ஆதரவாளர்கள் என கூறி சங்கரை தரக்குறைவாக பேசி கடையினுள் நுழைந்து சங்கர் மற்றும் அங்கு பணிபுரிபவர்களை தாக்கியதோடு, கடையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தி சாலையில் தூக்கி வீசி உள்ளனர்.
மேலும் கடையில் இருந்த 25 ஆயிரம் ரூபாயை அபகரித்த அவர்கள், தாங்கள் வழக்கறிஞர்கள் என்றும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய இயலாது என்றும் கூறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து சங்கர் தலைமைச் செயலக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்