மெர்சல் விளம்பரத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
மெர்சல் என்ற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்சல். நேற்று வெளியான இப்படத்தின் டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல திரைப்பிரபலங்களும் மெர்சல் டீஸரை வெகுவாக புகழ்ந்திருந்தனர். இதனிடையே, தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார்.
அதில் கடந்த 2014-ஆம் ஆண்டே 'மெர்சலாயிட்டேன்' என்ற பட தலைப்பை பதிவு செய்திருந்தேன். புதுமுக நடிகர்கள் நடிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனரே இயக்கி வருகிறார். தொடர்ந்து படத் தலைப்பை புதுப்பிக்கும் பணியும் செய்து வருகிறேன். எனவே மெர்சல் என்ற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்வது தவறானது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்த போது மெர்சல் என்ற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனிடையே, மதியம் படக்குழு சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிகப்படியான பொருட்செலவில் படம் எடுக்கப்பட்டுள்ளதால், படத்தை விளம்பரப்படுத்த தடை விதிக்க கூடாது என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்காத நீதிபதி, மெர்சல் என்ற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய அக்டோபர் 3-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து, அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்தார்.