கீமோதெரபி சிகிச்சையால் கண்கள் பாதிப்பு: சோனாலி பிந்த்ரே அதிர்ச்சி!
கீமோதெரபி சிகிச்சை காரணமாக கண்கள் பாதிக்கப்பட்டது என்று நடிகை சோனாலி பிந்த்ரே தெரிவித்துள்ளார்.
தமிழில், ’காதலர் தினம், ’கண்ணோடு காண்பதெல்லாம்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே. 2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெல்லை திருமணம் செய்துகொண்ட இவர், நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார். 43 வயதாகும் சோனாலி, தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் தனது சிகிச்சை உள்ளிட்ட விஷயங்களை குறித்து அமெரிக்காவில் இருந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் கீமோ சிகிச்சைக்காக மொட்டை அடித்தார். அப்போது அவர் கண்ணீர்விட்டபடி உருக்கமாக பேசியிருந்தார். பிறகு சிகிச்சைக்குப் பின் விக் வைத்துக்கொண்டு, புதிய தோற்றத்தில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அதற்கு கீழே, ‘தோற்றம்தான் என் அழகிய சாபம். அழகாக இருக்க, யாருக்குத்தான் ஆசை இருக்காது? நமது தோற்றம் அழகாக இருப்பது முக்கியம். அது ஆழ்ந்த உளவியல் தாக்கத்தை நம் மீது ஏற்படுத்தும். தன் தோற்றம் பற்றிய கர்வம் இருப்பது மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது. உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் விஷயங்களை செய்து கொண்டிருப்பது முக்கியம். எப்படி இருந்தால் மகிழ்வாக இருப்பீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். அதனால் அதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே தனக்கு விக் தயாரித்துக் கொடுத்த பெண் பாஹி என்பவர் பற்றி புகழ்ந்து சமீபத்தில் பதிவிட்டிருந்தார்.
இப்போது கீமோதெரபி சிகிச்சை காரணமாக கண்கள் பாதிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், ’கீமோதெரபி சிகிச்சை காரணமாக எனது கண்கள் வினோதமான செயல்களை செய்தன. என்னால் சில நேரம் படிக்க முடியாமல் போய்விட்டது. இதனால் பீதி அடைந்தேன். இப்போது சரியாகிவிட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, இப்போது லிட்டில் லைஃப் என்ற புத்தகத்தை வாசித்து வருகிறேன். இது பல இலக்கிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகம். நட்பு மற்றும் லட்சியத்தை மையமாக கொண்ட புத்தகம் இது. என்னோடு நீங்களும் வாசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.