’பிகில்’ கதைப் பஞ்சாயத்து: அட்லீ மீது தெலுங்கு இயக்குநர் மோசடி புகார்!

’பிகில்’ கதைப் பஞ்சாயத்து: அட்லீ மீது தெலுங்கு இயக்குநர் மோசடி புகார்!

’பிகில்’ கதைப் பஞ்சாயத்து: அட்லீ மீது தெலுங்கு இயக்குநர் மோசடி புகார்!
Published on

’பிகில்’ படத்தின் கதை தொடர்பாக, இயக்குநர் அட்லீ மீது தெலுங்கு இயக்குநர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பிகில்’. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸ் ஆனது. தெலுங்கில் ’விசில்’ என்ற பெயரில் இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ளது. கால்பந்து பயிற்சியாளரைப் பற்றிய இந்தப் படத்தின் கதை, தன்னுடையது என்று கூறி செல்வா என்ற உதவி இயக்குநர் வழக்குத் தொடர்ந்துள்ளார். மற்றொரு உதவி இயக்குநர் ஒருவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் தெலுங்கு இயக்குநர் நந்தி சின்னி குமார் என்பவர், இயக்குநர் அட்லீ மீது கச்சிபவுலி போலீஸ் ஸ்டேஷனில் மோசடி புகார் கொடுத்துள்ளார். 

இதுபற்றி அவர் கூறும்போது, ‘மகாராஷ்டிராவைச் சேர்ந்த முன்னாள் கால்பந்துவீரரும் தற்போதைய பயிற்சியாளருமான அகிலேஷ் பாலின் கதையை சினிமாவாக எடுக்க முடிவு செய்திருந்தேன். இதற்காக அவரை சந்தித்து ஒப்பந்தம் போட்டோம். கதைக்காக அவருக்கு ரூ.12 லட்சம் தருவதாக பேசி, முதலில் 5.5 லட்சம் ரூபாயை, ஐதராபாத் கச்சிபவுலியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து கடந்த ஆண்டு கொடுத்தேன். மீதி பணத்தை படம் முடிந்த பின் கொடுப்பதாகப் பேசியிருந்தோம்.

(அகிலேஷ் பாலுடன் நந்தி சின்னி குமார்)

இந்நிலையில் ’பிகில்’ படத்தின் டிரைலரை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தேன். பாலின் கதையும் ’பிகில்’ கதையும் ஒன்று போல் இருந்தது. இதையடுத்து, நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ ஆகியோரை தொடர்பு கொள்ள முயன்றேன். நான் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரதியையும் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் எந்த பதிலுமில்லை. இது தொடர்பாக முன்னாள் கால்பந்துவீரர் அகிலேஷ் பாலையும் தொடர்பு கொள்ள முயன்றும் பயனில்லை. என் கதையை திருடி படம் எடுத்த அவர்கள் மீது, காப்பி ரைட் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து ஐதராபாத் கச்சிபவுலி போலீசார், இயக்குநர் அட்லீ மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ’அகிலேஷ் பாலின் பதிலை அடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்’ என்று கச்சிபவுலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாஸ்  தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com