வழக்கை சந்திக்க தயார்: ஜெயக்குமாருக்கு சாருஹாசன் கண்டனம்
நடிகர் கமல்ஹாசன் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தால், அதனை சந்திக்க தயாராக இருப்பதாக அவரது சகோதரர் சாருஹாசன் தெரிவித்துள்ளார்.
தமது முகநூல் பக்கத்தில் அடுத்தடுத்து தமிழக அரசை விமர்சித்து பதிவிட்டுள்ள சாருஹாசன், அமைச்சர் ஜெயக்குமாரின் அதிகார பேச்சு லஞ்சத்துக்கு துணை போகும் அரசு ஊழியர்போல் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார். கமல் சொல்வது புரியவில்லை என்று சொல்பவர்கள் பொய்யர்கள் என்றும் பிடிக்கவில்லை என்று சொல்வதற்குப் பதிலாக, புரியவில்லை என்கிறார்கள் என்றும் விளக்கமளித்துள்ளார்.
ஜெயலலிதாவை உயர்நீதிமன்றம் குற்றவாளி என்று கூறியது புரியவில்லையா அல்லது பிடிக்கவில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அம்மா வழியில் ஆட்சி எனக் கூறி, அதிமுக முக்கிய தலைவர்கள், 60 கோடி வரை கொள்ளையடிப்போம் என சொல்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
60 கோடி ரூபாய் கொள்ளை அடித்தது குற்றம்தான், இதுபோன்ற தலைமை தமக்கு தேவை இல்லை என்று கூறும் வீரம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கூட இல்லை என அவர் விமர்சித்துள்ளார். அவர்கள் எல்லாம் 60 கோடி ரூபாய் கொள்ளை உண்மை என்று ஒப்புக்கொண்டால் வாக்குகள் குறைந்துவிடும் என்று கலங்குகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். மக்களில் பெரும்பான்மையினர் லஞ்சத்தை விருப்புகிறார்கள் என்று தெரிகிறது என சாருஹாசன் கூறியுள்ளார்.