தமிழகத்தில் பிரபலமாகும் 'மீ டூ' ! பெருகும் ஆதரவு

தமிழகத்தில் பிரபலமாகும் 'மீ டூ' ! பெருகும் ஆதரவு
தமிழகத்தில் பிரபலமாகும் 'மீ டூ' ! பெருகும் ஆதரவு

சமீப நாட்களாக பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் இணையத்தில் கொடுக்கப்படும் மன உளைச்சல்கள் குறித்தும் தைரியமாக பெண்கள் குரல் கொடுத்து வருகின்றனர். சினிமா, பத்திரிக்கை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பெண்களும் தினம் தினம் ட்விட்டரில் #metoo என்ற ஹேஷ்டேக் மூலம் பாலியல் அத்துமீறல்கள் குறித்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் பாடகி சின்மயி சிறு வயதில் தான் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். பின்னர் பாடலாசிரியர் வைரமுத்து மீது  பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை ட்விட்டரில் முன்வைத்துள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது பாலியல் ரீதியாக வைரமுத்து தன்னை அணுகியிருந்ததாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து சின்மயிக்கும், மீ டூ பரப்புரைக்கும் பலர் ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்களது கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சின்மயிக்கு ஆதரவாக பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்து இருந்தார். அதில் ''பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது. அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சிக்கும் திரைத்துறையினர் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டுகொள்ளாதது ஏன்'' என வினவியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வரலட்சுமி ''முன்னெப்போதும் இல்லாத வகையில், பாலியல் வன்முறைகள் குறித்து பெண்கள் பேசுவது வரவேற்கத்தக்கது. பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

சின்மயிக்கு ஆதரவாக ட்விட்டரில்  கருத்து பதிவிட்ட நடிகை சமந்தா ''தனக்கு சின்மயியையும் அவரது கணவரையும் பத்து வருடங்களாக தெரியும். அவர்கள் நேர்மையானவர்கள். சொல்வதெல்லாம் உண்மையாகவே இருக்கும். நான் சின்மயிக்கு ஆதரவாக இருக்கிறேன்'' என தெரிவித்திருந்தார். 

அவர்களுக்காகவும், அவர்களின் நேர்மைக்காகவும் துணிந்து நிற்கும் பெண்களுக்கு நான் என்றுமே ஆதரவாக இருப்பேன் என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மீ டூ பரப்புரைக்கு ஆதரவுக்கு தெரிவித்து இருக்கும் பிரகாஷ்ராஜ், ''இது அனைவரது வாழ்விலும் வரும் தொற்று நோயே, சமூகத்துக்காக அதை வெளிப்படுத்தி நீங்கள் தைரியமாக கையாண்டு இருக்குறீர்கள். உங்களது பணி தொடர வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

தைரியமாக குரல் கொடுக்கும் பெண்களுக்கு நாம் ஒன்றிணைந்து ஆதரவு தர வேண்டும் என பாலிவுட் நடிகை அதிதி ராவ் மீ டூ பரப்புரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சுபாஷ் கபுர் என்ற பாலிவுட் இயக்குநர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டதால்,  தாங்கள் தயாரிக்கவிருந்த படத்தின் இயக்குநரான சுபாஷ் கபூருடன் பணிபுரிய விருப்பமில்லை என அமீர்கான் - கிரண்ராவ் தம்பதி அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com