”நீ உயிருடன் இதனைப் படிக்கவேண்டும்”: ஆனந்த கண்ணன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்
பிரபல விஜே ஆனந்த கண்ணன் மறைவையொட்டி அவரது துறையைச் சேர்ந்த சக விஜேக்களும் திரைத்துறையினரும் சமூக வலைதளங்களில் உருக்கமுடன் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் விஜேவான ஆனந்த கண்ணன் புற்றுநோய் பாதிப்பால் நேற்றிரவு உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி ரசிகர்களும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆனந்த கண்ணன் ஒரு சிறந்த நண்பர்: சிறந்த மனிதர். இன்று அவர் இல்லை. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பாடகி ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது சகோதரராக, தந்தையாக, நண்பருக்கும் மேலானவராக ஆனந்த கண்ணன் இருந்தார். எனது மகிழ்ச்சியையும் வலிகளையும் அவருடன் பகிர்ந்துகொண்டேன். எப்படி வாழ்வது எப்படி மற்றவரை நேசிப்பது என்று அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். எனது கணவர் சத்யாவை திருமணம் செய்துகொள்ள ஆனந்தக் கண்ணனின் சம்மதத்தைக் கேட்டேன். என் அம்மா என்னைப்பற்றி குறைகள் சொன்னாலும் ‘அவள் என் தங்கச்சி அப்படி கிடையாது. அவளைப் பற்றி எனக்கு தெரியும்’ என்று எனக்கு சப்போர்ட் செய்வார். அவர், உயிருடன் இதனைப் படிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தார். நான் சந்தித்த மனிதர்களில் மிகச்சிறந்த குணம் கொண்டவர். அவரைச் சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருந்தார். மக்கள் அவரிடம் ஹாய் சொல்ல அல்லது புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பி தயங்கி நிற்கும்போது இவரே சென்று பேசுவார். அப்படிப்பட்டவர் இன்று இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. என்னால் இனி உன்னை பார்க்க முடியாது அண்ணா. நிச்சயம் உனக்கு சொர்க்கத்தில் ஒரு சிறந்த இடம் உள்ளது” என்று உருக்கமுடன் பதிவிட்டிருக்கிறார்.
நகைச்சுவை நடிகை ஆர்த்தி, “ஆனந்த கண்ணன் சகோதரர் நம்மையெல்லாம் சீக்கிரமே ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார். மிகவும் நேர்மையானவர். பாஸிட்டிவானவர். அவரது, குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
தொகுப்பாளினி அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ சன்மியூசிக்கில் ஆனந்த கண்ணன் எனக்கு சூப்பர் சீனியராக இருந்தாலும் அவரை ஒருமுறைக்கூட நான் சந்தித்ததில்லை. ஆனால், அவரது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். அவரது ரசிகர்கள் மூலம் அவரைப்பற்றி சிறந்த முறையிலேயே கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனந்த கண்ணன் காலத்தில் விஜேவாக இருந்த காஜல் பசுபதி அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “நீங்க முடியுமா.. நினைவு தூங்குமா” பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டுள்ளார்.
மேலும், ’பிக்பாஸ் சீசன் 4’சனம் ஷெட்டி ஆனந்த கண்ணன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.