ஹிப் ஆப் தமிழா ஆதியின் கோவை புதிய ஆன்தம் வெளியானது.
ஹிப் ஆப் தமிழா ஆதியின் பாடல்கள் இன்றைய தலைமுறையினரின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. முதலில் சுதந்திரமான பாடகராக அவர் வலம் வந்தார். அவர் சினிமாவுக்கு வந்த பிறகு ஆல்பம் பாடல்களை உருவாக்குவதில் சுணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் ஒரு ஆங்கில பத்திரிகையின் முயற்சியோடு கோவை கெத்து ஆன்தம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
இதை பற்றி ஆதி, “நான் பல்வேறுவிதமான யோசனைகளை வைத்திருந்தேன். சுதந்திர பாடகனாக இருந்து நிறைய ஆல்பங்களை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். என் டக்கரு டக்கரு ஆல்பம் 2016ல் வெளியானது. அதன் பின் சுதந்திரமான ஆல்பங்களை கொண்டு வரவில்லை. அந்த நேரத்தில்தான் இந்த கோவை கெத்து வாய்ப்பு வந்தது. இரண்டாவது முறை நான் இதை செய்வேன் என்று எதிர்பாக்கவில்லை.
என் இதயத்தின் பக்கத்தில் கோவை இருக்கிறது. என் வாழ்க்கையில் பெரும்பாலான நாள்களை இங்கேதான் செலவிட்டிருக்கிறேன். இந்தப் பாடலை என்னை உருவாக்கிய இந்த நகரத்திற்கு காணிக்கையாக்குகிறேன். அதே சமயம் இன்னொரு நகரத்தை நான் குறைத்து எடைப்போடுகிறேன் என்று நீங்கள் எடுத்து கொள்ளக் கூடாது. இந்த ஆன்தம் மூலம் என் பால்ய வாழ்க்கைக்கு நான் திரும்பி இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.