”என்னை ஏமாற்றிவிட்டார்” - நடிகர் காதல் சுகுமாரன் மீது துணை நடிகை காவல் நிலையத்தில் புகார்!
திருமணமானதை மறைத்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து நகை பணம் மோசடி செய்ததாக துணை நடிகை, நடிகர் மீது காவல் நிலையத்தில் புகார்.
வடபழனியைச் சேர்ந்த 36 வயது நடிகை ஒருவர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை உள்ள நிலையில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் காதல் சுகுமாரனுக்கும் தனக்கும் பழக்கம் ஏற்பட்டு பின் காதலித்து வந்ததாக பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நடிகர் சுகுமாரன் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியும், தன்னிடமிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நகை பணம் வாங்கி கொண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சமீப நாட்களாக தனது செல்போன் நம்பரை பிளாக் செய்து விட்டு பேசுவதை தவிர்த்து வந்ததாகவும், இதுகுறித்து கேட்டபோது ஏற்கனவே தனக்கு திருமணம் ஆனதாக சுகுமாரன் தெரிவித்ததாகவும் துணை நடிகை புகார் தெரிவித்துள்ளார்.
இப்படி தன்னை ஏமாற்றி பண மோசடி செய்த நடிகர் சுகுமாரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.