’வலிமை’ படத்துக்கு எதிரான வழக்கு: போனி கபூர், எச்.விநோத் ஆகியோருக்கு நோட்டீஸ்

’வலிமை’ படத்துக்கு எதிரான வழக்கு: போனி கபூர், எச்.விநோத் ஆகியோருக்கு நோட்டீஸ்
’வலிமை’ படத்துக்கு எதிரான வழக்கு: போனி கபூர், எச்.விநோத் ஆகியோருக்கு நோட்டீஸ்
மெட்ரோ படத்தின் கதை, கதாபாத்திரங்களை  அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக கூறி, ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரிய  மனுவுக்கு பதிலளிக்கும்படி, வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் ஹெச். வினோத் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், தங்களின் மெட்ரோ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த படத்தை தயாரித்த ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மெட்ரோ படத்தில் வசதியான வாழ்வுக்காக, சங்கிலி பறிப்பு, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போல காட்சிப்படுத்தப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
மெட்ரோ படத்தை இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் தயாரிக்க உள்ள நிலையில், அதே கதை, கதாபாத்திரங்களுடன் படமாக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது என்பதால், வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, மார்ச் 17ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குனர் வினோத் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.



Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com