கான்ஸ் திரைப்பட விழாவில் "மோடி நெக்லஸ்"...நடிகை சொல்லும் ஸ்வாரஸ்ய விளக்கம்!
ஒவ்வொரு ஆண்டும் கான்ஸ் திரைப்பட விழாவில் பிரபலங்கள் அணியும் உடைகளும் அணிகலன்களும் அனைவரின் கவனத்தையும் பெறும் வகையில் இருக்கும்.
இந்தவகையில், பிரான்ஸ் நாட்டில் 78-வது கேன்ஸ் திரைப்பட விழா மே 13 அன்று தொடங்கியது. இதில், ஐஸ்வர்யா ராய் தான் அணிந்து வந்த உடையின் மூலம் மீண்டும் அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறார்.
மணீஷ் மல்ஹோத்ரா தந்த பனாரசி சேலையில் வந்திருந்த அவர், நெற்றியில் குங்குமம் அணிந்திருந்தார். இதன் மூலம், கணவர் அபிஷேக் பச்சனுடனான விவாகரத்து தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார். மேலும், இது ஆப்ரேஷன் சிந்தூரை நினைவுக்கூறும் வகையில் இருப்பதாக இணையதளத்தில் பேசப்பட்டு வந்தது. இப்படி பலர் அணிந்த வந்த ஆடைகள் கவனத்தை பெற்றநிலையில், மிகவும் கவனத்தை பெற்றது ருச்சி குஜ்ஜரின் ஆடை அணிகலன் தான்.
நடிகையும் மாடல் அழகியுமான ருச்சி குஜ்ஜர், மணமகளை போல உடை அணிந்து வந்திருந்தார். மேலும், பாரம்பரிய குந்தன் நகைகளை அணிந்திருந்தார். அவரின் நெக்லஸில் பிரதமர் மோடியின் படங்களும் இடம்பெற்றிருந்தனர். முத்துக்கள் மற்றும் சிவப்பு எனாமல் தாமரைகளுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் உருவப்படம் அந்த நெக்லஸில் இடம்பெற்றிருந்தது.
இதுகுறித்து பேட்டி அளித்த அவர், "இந்த நெக்லஸ் வெறும் நகை அல்ல, இது வலிமை, தொலைநோக்குப் பார்வை மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் எழுச்சியை வெளிப்படுத்துகிறது. இதை கான்ஸுக்கு அணிந்துவருவதன் மூலம் நான் பிரதமர் மோடியை பெருமைபடுத்த நினைக்கிறேன், ஏனெனில் அவரது தலைமைதான் இந்தியாவை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றுள்ளது." எனப் பேசியுள்ளார். தற்போது இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.