உண்மையான நட்பு என்பதை உணர வைத்ததற்கு நன்றி: சோனாலி பிந்த்ரே..!
கேன்சருக்கு எதிராக போராடி வரும் நடிகை சோனாலி பிந்த்ரே, தலையில் மொட்டையடித்த தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளதோடு நண்பர்கள் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
தமிழில் ’பம்பாய்’ படத்தில் ’ஹம்மா ஹம்மா’ பாடலுக்கு ஆடியவர் இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே. பின்னர், ’காதலர் தினம், ’கண்ணோடு காண்பதெல்லாம்’ படங்களின் ஹீரோயினாக நடித்தார்.
2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெல்லை திருமணம் செய்துகொண்ட இவர், பிறகு நடிப்பதில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார். 43 வயதாகும் சோனாலி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் ஏற்கனவே சமூகவலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் விரைவில் குணமாக ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு ஆதரவாக பல்வேறு நடிகர், நடிகைகளும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தலையில் மொட்டையடித்துள்ள தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள சோனாலி பிந்த்ரே நண்பர்கள் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், “உண்மையில் நான் மிகவும் சந்தோகமாகத் தான் இருக்கிறேன். ஆனால் இதனை வெளியில் சொன்னால் மற்றவர்கள் வித்தியாசமாக பார்க்கிறார்கள். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். சந்தோஷத்திற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் தேடி பயன்படுத்திக் கொள்கிறேன். எனக்கு என்ன பிடிக்கிறதோ அதையே செய்கிறேன். நான் விரும்பும் நபர்களுடன் அதிக நேரத்தை செலவிடுகிறேன். என் நண்பர்களுக்கு உண்மையிலேயே நன்றி. அவர்கள் தான் என் நம்பிக்கையின் தூண்கள். அவர்களின் பிஸியான நேரத்திலும் கூட என்னை பார்ப்பதற்காக வருகிறார்கள். மெசேஜ் செய்கிறார்கள். போனிலும் பேசுகிறார்கள். உண்மையில் நான் தனிமையாகவே இல்லை. உண்மையான நட்பு என்பதை காட்டிய நண்பர்களுக்கு நன்றி. தலையில் முடி இல்லாததும் அழகு தான். நேர்மறை எண்ணங்களை தேடிபிடியுங்கள்” என தெரிவித்துள்ளார்.