'C/O காதல்' - அன்பின் துல்லியம் - சினிமா விமர்சனம்

'C/O காதல்' - அன்பின் துல்லியம் - சினிமா விமர்சனம்

'C/O காதல்' - அன்பின் துல்லியம் - சினிமா விமர்சனம்

தெலுங்கு மொழியில் 2018-ஆம் ஆண்டு வெளியான சினிமா C/O, கஞ்சரபாலம். இப்படத்தை வெங்கடேஷ் மகா இயக்கியிருந்தார். அதில் சுப்பாராவ், ராதா பெஸ்ஸி, கார்த்திக் ரத்தினம் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கில் பெரிய அளவில் ஹிட் ஆனது. அதனைத்தொடர்ந்து இப்படம் தமிழில் ரீமேக் செய்வதென முடிவானது. C/O காதல் என்ற பெயரில் தமிழில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஹேமம்பார் ஜஸ்டி. Shri Shirdi Sai movies & Big print pictures ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கின்றன.

தற்போது வெளியாகி இருக்கும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தீபன். இவர்தான் பாரதிராஜாவின் முதல்மரியாதை படத்தில் சிவாஜியின் மருமகனாக நடித்தவர். 49 வயதைத் தாங்கிய கதாபாத்திரத்தில் தீபன் இப்படத்தில் நடித்திருக்கிறார். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் நன்றாகவே கதைக்கு பொருந்தியும் இருக்கிறார். ‘ஒரு அழகான காதல் கதை’ அவ்வளவுதான் இப்படத்தின் கதைச் சுருக்கம். ஒரு சாதாரண காதல் கதை எந்தப் புள்ளியில் ஸ்பெஷல் திரைப்படமாக மாறியிருக்கிறது என்றால் அதற்கு இப்படத்தின் எடிட்டிங் முதல் காரணம்.

ஒரு எளிமையான கதை அதன் ப்ரஷண்டேஷனில் திரையில் எப்படி மேஜிக் செய்யும் என்பதற்கு நல்ல உதாரணமாக இப்படத்தைக் கூறலாம். அந்த மேஜிக்கை செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் ப்ரஷாத். இந்திய அளவில் பல்வேறு திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர் ஸ்ரீகர் ப்ரஷாத். குட்டி, தங்க மீன்கள், கன்னத்தில் முத்தமிட்டாள், கடல், டும்டும்டும் என பல தமிழ் சினிமாக்களுக்கு படத்தொகுப்பாளர் இவரே. இதில் கன்னத்தில் முத்தமிட்டாள் இவருக்கு தேசிய விருதினை பெற்றுத் தந்தது.

C/O காதல், வெவ்வேறு காலகட்டத்தில் நிகழும் ஒரு காதலும், முடிவில் ரசிகர்களுக்கு கிடைக்கும் சர்ப்ரைஸ் உணர்வும்தான் இப்படத்தின் திரைக்கதை. வழக்கமாக சினிமா வட்டாரத்தில் இது ஆர்ட்டிஸ்ட் மூவி, இது இயக்குநர் மூவி என்று பிரிப்பார்கள். ஆனால் C/O காதல் எடிட்டர்ஸ் மூவி. நேரடியாக சொல்லப்படும் ஒரு கதையை நான்லீனியர் கதை சொல்லல் பாணியில் காட்சிகளை களைத்துப் போட்டால் அதுவே வேறு கதையாக கிடைக்கும் அல்லது அந்தக் கதைக்கு வேறு கோணம் கிடைக்கும். C/O காதல் அதனை செய்திருக்கிறது. திரைக்கதை அமைப்பு மூலம் இயக்குநர் ஹேமம்பார் ஜஸ்டி ரசிகர்கள் மனதில் பெரிய ரசவாதம் புரிந்திருக்கிறார்.

தமிழில் இந்தக் கதையை சொல்வதற்கு வரலாற்று நகரமான மதுரையை தேர்வு செய்தது ரொம்பவே சரி. மதுரையின் சமணர் மலைகளை, மதுரை நிலத்தின் அழகை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் குணசேகரன். அதிலும் மதுரையை சமகாலத்தில் அல்லாமல் சிலதசாப்தங்கள் பின்னே சென்று படம்பிடித்தல் என்பது இப்படத்தின் ஒளிப்பதிவாளருக்கு நல்ல சவால். அந்த சவாலில் வென்றுகாட்டியிருக்கிறார் குணசேகரன். அழகர் கோவில் மலையின் மேல் நெளியும் பேருந்துக் காட்சி அழகு. மதுரை மண்ணின் வட்டார வழக்கு இப்படத்தில் மிஸ்ஸிங். அந்தக் குறையை இன்ன பிற விசயங்கள் சரி செய்திருக்கின்றன. எல்லா ப்ரேமிலும் பேக்ட்ராப்பில் அமைதியாக நின்று இக்கதையின் கதாபாத்திரங்களை ரசிக்கிறது மதுரை.

கார்த்திக் நேத்தாவின் பாடல்வரிகள் இதம். “காற்றில் ஆடும் தீபம் ஓயாதே” “ஓடும் நீரில் வீழும் தூறல்கள் கை சேருமோ?” போன்ற வரிகள் அழகு. ஸ்வீகர் அகஸ்தியின் இசை நாட்பேட். ஜோஷப்பாக வரும் கார்த்திக் ரத்தினம் கதையின் வசீகர பகுதியில் ஸ்கோர் செய்திருக்கிறார். கிஷோர் குமார் பொலிமேராவின் நடிப்பு சிறப்பு. தெலுங்கு, தமிழ் என இரண்டு வெர்ஷனிலும் இக்கதாபாத்திரங்களில் இவர்களே நடித்திருக்கின்றனர். சரியாகச் சொன்னால் இவர் தான் அவர்தான் என்றில்லாமல் இப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களுமே அவரவர் வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

தெலுங்கில் பார்கவி கதாபாத்திரத்தில் நடித்தவர் ப்ரனீதா பட்நாயக். டஸ்கி கலர் அழகியாக வலம் வருவார். தமிழிலும் ஒரு டஸ்கி கலர் அழகியை நடிக்கச் செய்திருக்கலாம் என்றாலும் தமிழ் பார்க்கவியும் நல்ல சாய்ஸ். சலீமாவின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மும்தாஜ் சொர்கர். சலீமா கதாபாத்திரம் இக்கதையில் முக்கியமானது. அழுத்தமானதும் கூட. சலீமாவின் இறப்பு குறித்து விசாரிக்ககூட போலீஸ் முன்வரவில்லை என்பதை “யோவ் இதெல்லாம் விசாரிக்கணுமா போய் புதச்சுட்டு வேலையப் பாருங்கையா” என வாயிஸ்ஓவர் மூலம் சொல்லி அந்தக் காட்சியை விஷ்வலாக ஸ்கிப் செய்திருப்பது திறமை. வாய்ஸ் ஓவராக அல்லாமல் திரைக்காட்சியாக இடையில் அதனை சொறுகி இருந்தால், சலீமாவின் மரணம் தரும் துன்பத்தின் அடர்த்தியை ரசிகர்கள் இழந்திருப்பார்கள். அவ்வகையில் துன்பத்தின் நூல் அறுந்துவிடாமல் அக்காட்சி நிறைவாக முடிக்கப்பட்டிருக்கிறது.

இப்படம் இவ்வளவு பாஸிட்டிவாக வர இன்னுமொரு காரணம் படத்தில் எங்குமே நெகட்டிவ் கதாபாத்திரங்கள் இல்லை. எல்லோரும் நல்லவர்கள். இடையில் சில மதவாதிகளை காண்பித்தாலும் அவர்கள் கதையின் போக்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதால் அவர்களை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் இத்தனை அழகான படத்தில் எதற்கு அத்தனை முறை பொட்டை என்ற சொல்.? அதனை தவிர்த்திருக்கலாம்.

பொட்டை என்ற சொல்லை ஒரு முறைக்கு சில முறை பயன்படுத்தியிருப்பது படத்தின் ஆன்மாவை உடைக்கிறது. தவிர்க்கவே முடியவில்லை என்றாலும் கூட குறைந்தபட்சம் முதலிரவுக் காட்சியிலாவது அந்த வார்த்தையை தவிர்த்திருக்கலாம். மொத்த படத்தையும் ரசிகர்கள் ஒற்றைப் புள்ளியில் உணர்ந்து பரவசமடையப் போவதே அந்த முதலிரவுக் காட்சியில் தான். அப்படியொரு காட்சியில் பயன்படுத்தப் பட்டிருக்கும் பொட்டை என்ற சொல் அசவுகர்ய உணர்வைத் தருகிறது. குறைகளை தவிர்த்துப் பார்த்தால் C/O காதல் என்கிற இந்த சினிமா அன்பின் துல்லியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com