வினோதமான ஃபேண்டசி காமெடி படம்... என்ன சொல்கிறது இந்த `பாம்'? | Bomb | Arjun Das | Kali Venkat
வினோதமான ஃபேண்டசி காமெடி படம்... என்ன சொல்கிறது இந்த `பாம்'?(2 / 5)
பிரிந்துகிடக்கும் மக்களை இணைக்க போராடும் இளைஞனின் கதையே `பாம்'
ஒருதாய் மக்களாய் வாழும் காளக்கம்மாய்பட்டி ஊர்மக்கள், மத சண்டையை காரணமாய் வைத்து காளைபட்டி, கம்மாய்ப்பட்டி எனப் பிரிகிறார்கள். ஊருக்குள் நடக்கும் சண்டைகளை தடுக்காமல், வளர்க்கிறார்கள் ஊர் தலைவர்களான சிங்கம்புலி - ரவி. இந்த நெருப்பில் குளிர்காய்கிறார் உள்ளூர் அரசியல்வாதி நாசர். பிரச்சனைகளை தீர்த்து மக்களை சேர்க்க நினைக்கிறார் காளி வெங்கட், இந்த ஊர் திருந்தாது ஊரில் இருந்து வெளியேறுவோம் என சொல்கிறார் அர்ஜூன் தாஸ். இந்த சூழலில் எதிர்பாராத விதமாக இறந்து போகிறார் காளி வெங்கட். அவரை அடக்கம் செய்ய முடியாத படி ஒரு வினோதமான சிக்கல் எழுகிறது. அதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.
`சில நேரங்களில் சில மனிதர்கள்' மூலம் மனிதர்கள் இடையே உள்ள சிக்கல்களை பேசி கவனிக்க வைத்த விஷால் வெங்கட், இந்த முறை பிரிவினைவாதத்தை பகடியாக சொல்லி இறுதியில் அன்புதான் வெல்லும் என சொல்ல முயன்றிருக்கிறார். அதில் காமெடி ஃபேண்டசி விஷயங்களை கலந்து சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார்.
அர்ஜூன் தாஸ் நாயகன் என்றாலும், கதையில் அவரும் ஒரு பாத்திரமாக மட்டுமே வந்து போகிறார். ஹீரோ என்ற எந்த மிடுக்கும் காட்டாமல், மிக இயல்பாக வந்து போகிறார். படத்தில் நடிப்பாக கவர்வது காளி வெங்கட். எப்போதும் நடிப்பில் தான் கவனிக்க வைப்பார், இப்போது பிணமாக கூட நடிப்பில் கவனிக்க வைக்கிறார். அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் குபீர் காமெடி. அடுத்ததாக ஈர்ப்பது சிங்கம் புலி. காளைப்பட்டி ஊராரை பார்த்தாலே வெறுப்பாய் பார்ப்பது, தீண்டாமையை கடைபிடிப்பது என ஆதிக்க மனப்பான்மை கொண்ட நபரை மிக எளிதாக கண்முன் நிறுத்துகிறார். நாயகி ஷிவாத்மிகா எமோஷனலான காட்சிகளில் கவர்கிறார். டி எஸ் கே, ஊர் சிறுவர்களாக வரும் சில்வென்ஸ்டன், பூவையார், கலெக்டர் ரோலில் வரும் அபிராமி, அரசியல்வாதி நாசர் என சின்ன சின்ன பாத்திரங்களில் வரும் நடிகர்களும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.
ராஜ்குமார் ஒளிப்பதிவு படத்தின் மர்மமான தன்மைக்கு உதவுகிறது. நிறைய இரவுக்காட்சிகளை நன்றாக கையாண்டிருக்கிறார். டி இமானின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கிறது.
இந்தப் படத்தின் குறைகள் எனப் பார்த்தால், சொல்ல வந்த விஷயங்களை இன்னும் சுருக்கமாக கூறி இருக்கலாம். இரு ஊருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை, காலி வெங்கட்டின் முயற்சி என முதல் பாதி அறிமுகம் சற்றே நகர்ந்துவிட்டாலும், அதன் பிறகான காட்சிகள் எல்லாம் பெரிதாக நீட்டப்பட்டுள்ளன. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி நகருவேனா என்கிறது. காளி வெங்கட் மூலம் ஊரை இணைக்கும் வேலையை கையில் எடுக்கும் அர்ஜூன் தாஸ், அதற்காக எடுக்கும் முயற்சிகள் எதுவும் அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. இன்னும் சொல்லப்போனால், ஊரை இணைப்பது தான் காளியின் விருப்பம் எனப் புரிந்து கொள்ளவே அவர் அவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வது நம் பொறுமையை சோதிக்கிறது. முன்பு சொன்னது போல அர்ஜூன் தாஸ் ஹீரோவாக இருந்தாலும் படத்தில் அவருக்கான வேலை என்பது எதுவும் இல்லை. ப்ரீ க்ளைமாக்சில் வரும் லைஃப் டைம் செட்டில்மென்ட் வசனம் வரை, அவரால் இந்தக் கதையில் நடப்பதும் ஏதும் இல்லை.
மதம், சாதி இவற்றை குறியீடாக படத்துக்குள் வைத்தது, கடவுளை சாக்காக வைத்து மனிதர்கள் மோதிக் கொள்ளும் மூடத்தனத்தை பகடி செய்வது, "உள்ளுக்குள்ள இவ்வளவு இருட்டை வெச்சுகிட்டு, வெளிய ஜோதிய தேடுனா எப்படி கிடைக்கும்?" என்ற வசனம் என பல விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அவை முறையாக படத்தில் உட்காரவில்லை. எனவே ஒருகட்டத்தில் படத்தில் ஒரு பிரச்சாரத்தன்மை எட்டிப் பார்க்கிறது. சொன்ன விஷயங்கள், அதை காமெடியாக சொல்லவேண்டும் என்ற எண்ணமும் புரிகிறது. ஆனால் அது பார்வையாளர்களை படம் சோர்வுற செய்வதுதான் பிரச்னை. அவற்றை கொஞ்சம் சரி பார்த்து இருந்தால் `பாம்' குறி தப்பாமல் வெடித்திருக்கும்.
மொத்தத்தில் நல்ல கருத்தை, கொஞ்சம் பொறுமை சோதித்து சொல்கிறது இந்த `பாம்'.