விமர்சித்த பிரகாஷ் ராஜ், அனுராக்.. காட்டமாக பதிலளித்த ’The Kerala Story 2’ இயக்குநர்! | Prakash Raj
சுதீப்தோ சென் இயக்கத்தில் 2023இல் வெளியான இந்திப் படம் `The Kerala Story'. மாற்று மதத்தினரை, முஸ்லீம்களாக மாற்றுகின்றனர் என்ற கருத்தை முன்வைத்த இந்தப் படம் மிகப்பெரிய விவாதங்களை எழுப்பியது. இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் `The Kerala Story 2' பிப்ரவரி 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரில் ஒரு பெண்ணுக்கு வற்புறுத்தி பீஃப் ஊட்டப்படும் காட்சி உள்ளிட்ட விஷயங்கள் சர்ச்சையானது. இதனை விமர்சித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதிவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கொச்சி விமான நிலையத்துக்கு வந்த இயக்குநர் அனுராக் காஷ்யப்பிடம், `The Kerala Story 2' ட்ரெய்லர் பற்றி கேள்வி கேட்கப்பட, "கேரளா ஸ்டோரி மிக கீழ்த்தரமான படம். முழுக்க முழுக்க பிரசாரப் படம். யாராவது பீஃப்பை இப்படி ஊட்டுவார்களா? கிச்சடியைக்கூட யாரும் இப்படி ஊட்டமாட்டார்கள். நான்சென்ஸ் படம். அவர்கள் பணம் சம்பாதிக்கவும், எல்லோரையும் தாஜா செய்யவும், மக்களைப் பிரிக்கவும் விரும்புகிறார்கள். அந்த இயக்குநர் பேராசை பிடித்த மனிதர். அவர் நிறைய பணம் சம்பாதிக்க நினைக்கிறார்" எனக் கூறி இருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக `கேரளா ஸ்டோரி 2' படத்தின் இயக்குநர் கமக்யா நாராயண் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "அனுராக், கிச்சடியைக்கூட யாரும் இப்படி ஊட்டமாட்டார்கள் எனக் கூறியுள்ளார். ஆம் லட்டுவைக்கூட இப்படி ஊட்டக்கூடாதுதான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் சமூகத்தில் நம்முடைய அப்பாவி மகள்கள், பீஃப் உண்ண வற்புறுத்தப்படுகிறார்கள், மதம் மாற்றப்படுகிறார்கள். இது ஒரு குற்றம். பிரச்னை என்னவென்றால், அனுராக் காஷ்யப் ஜி மனதளவில் பலவீனமாகிவிட்டார்; அவருக்கு எல்லாவற்றிலும் ஒரு பிரச்னை உள்ளது. அவருக்கு பிராமணர்களுடன் ஒரு பிரச்னை உள்ளது, அவருக்கு நெட்ஃபிக்ஸ் உடன் ஒரு பிரச்னை உள்ளது, அவருக்கு திரைப்படத் துறையுடன் ஒரு பிரச்னை உள்ளது; இந்த மனிதருக்கு எல்லாவற்றிலும் ஒரு பிரச்னை உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் நேற்று, "உண்மையான கேரள ஸ்டோரி என்னவென்றால், பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் மீன் ஆகியவை சைவ உணவுடன் எவ்வாறு இணைந்து வாழ்கின்றன, அவை அனைத்தும் எவ்வாறு இணக்கமாக வாழ்கின்றன என்பதுதான்" என `கேரளா ஸ்டோரி 2'வை சீண்டும் விதமாக பதிவிட்டார். இதைப்பற்றி நாராயண் சிங் பேட்டி ஒன்றில் பேசியபோது, "பிரகாஷ் ராஜ் ஒரு உயர்ந்த நடிகர் என்று நான் முன்பு நினைத்தேன், ஆனால் அவர் ஒரு மனிதனாக தாழ்ந்தவர் என்று உணர்கிறேன். அவர் என்ன சாப்பிடுகிறார் என்பது எனக்குத் தெரியாது, எனக்கும் கவலையில்லை. ஆனால் அவர் சொல்லும் விஷயங்கள், அவர் என்ன சாப்பிடுகிறார் என்பதை பிரதிபலிக்கிறது" எனப் பேசியுள்ளார்.

