`ராமாயணா' படத்தின் ஒரு காட்சிக்கான இசைக்கு 7 நாட்கள் ஆனது! - Kumar Vishwas | Ramayana
பிரபல பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகிவரும் `ராமாயணா' படத்தின் அறிவிப்பு முதலே அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கிறது. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி மற்றும் சன்னி தியோல் ஆகியோர் முறையே ராமர், ராவணன், சீதை மற்றும் அனுமனாக நடிக்கின்றனர். ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் பாடல்களை பிரபல கவிஞரும் எழுத்தாளருமான டாக்டர் குமார் விஸ்வாஸ் எழுதியுள்ளார். சமீபத்தில் விஸ்வாஸ் அளித்த பேட்டி ஒன்றில் இப்படத்தின் பாடல் உருவாக்கம் பற்றி கூறியது பேசு பொருளாகி உள்ளது. அதில் அவர் "அயோத்தியிலிருந்து ராமர் கிளம்பும் காட்சிக்கான இசையை முடிக்க எனக்கும், ஹான்ஸ் ஜிம்மருக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் 7 நாட்கள் ஆனது. எங்கள் இதயங்கள் பக்தியாலும், கண்களில் நிறைந்திருந்த கண்ணீராலும் இசையமை முடிக்க முடியாத சூழல் உண்டானது.
நம்முடைய கதைகளில் ஒரு 'பிராண-தத்துவம்' இருக்கிறது. மேலும் அவற்றில் உள்ள தூய்மை அனைவரையும் தொடுகிறது, அது முஸ்லிம், கிறிஸ்தவர், இந்து அல்லது யூதர் என யாராக இருந்தாலும் சரி" என்று பகிர்ந்துள்ளார் விஸ்வாஸ். மிகப்பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகும் `ராமாயணா' படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகவுள்ளது.