25 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த Footage.. யூடியூபில் ரிலீஸான படம்! | Irfan Khan | Vidya Balan
இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் மறைந்த இர்ஃபான் கான். பல்வேறு படங்களின் மூலம் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. புற்றுநோய் காரணமாக 2020ஆம் ஆண்டு இவர் காலமானார். இவரின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் ஏப்ரல் 29ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. அன்று யாரும் எதிர்பாராத ஒரு ஸ்பெஷலான விஷயம் நடந்திருக்கிறது.
இர்ஃபான் கான் மற்றும் வித்யா பாலன் ஆகியோர் நடிக்க துவங்கிய ஆரம்ப காலகட்டங்களில் நடித்த படம், `The Last Tenant'. சார்த்தக் தாஸ்குப்தா இயக்கிய இந்தப் படம் 2000ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால், படத்தின் காட்சிகள் அனைத்தும் தொலைந்துபோனதால், படம் வெளியாகாமல் போனது. இப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சார்த்தக் தாஸ்குப்தா படத்தின் காட்சிகள் அடங்கிய VHS கேசட்டை சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் தொலைந்துபோன படத்தை தற்போது மீட்டு அதனை யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதுவும் இர்ஃபான் கானின் ஆறாம் ஆண்டு நினைவு நாளான ஏப்ரல் 29ஆம் அவருக்கு ட்ரிப்யூட்டாக வெளியிட்டுள்ளார். இப்படத்தில் நடித்த வித்யா பாலன் படத்தைப் பார்த்துவிட்டு அந்த அனுபத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், "25 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்த 'The Last Tenant ' திரைப்படத்தை, நேற்று இரவுதான் முதல்முறையாகப் பார்த்தேன். நான் அதில் நடித்தேன், ஆனால் ஏனோ அது வெளிவரவே இல்லை. நான் தொட்டதெல்லாம் கைகூடாத ஒரு காலகட்டத்தில், இது நடந்தது. எனது முதல் மலையாளப் படமான 'சக்ரம்' கிடப்பில் போடப்பட்டது. அதைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட பன்னிரண்டு படங்களில் எனக்குப் பதிலாக வேறு நடிகர்கள் நியமிக்கப்பட்டனர்.
சுருக்கமாகச் சொன்னால், அந்த நேரத்தில் கைகூடாத மற்ற எல்லா விஷயங்களையும் போலவே, இதையும் நான் மறக்க விரும்பினேன்... அப்படியே செய்தேன். நான் அதை விடாமுயற்சியுடன் மூடிமறைத்தேன்... கடந்த வாரம் அப்படம் யூடியூபில் வெளியாகி இருப்பதாக இயக்குநர் சார்த்தக் தாஸ்குப்தாவிடமிருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வரும் வரை. அப்போது ஒரு மங்கலான நினைவு தோன்றியது. 'Banegi Apni Baat'ல் நடித்த இர்பான் கானுடன் நான் நடிக்கிறேன் என படப்பிடிப்புத் தளத்திலிருந்து என் சகோதரி ப்ரியா பாலனுக்கு உற்சாகமாக போன் செய்து சொன்னது நினைவுக்கு வந்தது. அப்போது அவர்தான் மிகவும் இயல்பான நடிகர் என்று நான் நினைத்தேன், நேற்றிரவும் அப்படித்தான் உணர்ந்தேன்... ஒருபோதும் பொய்யான சுருதியோ தொனியோ இருந்ததில்லை. மேலும், இர்பானின் மறைவுக்குப் பிறகு, நாங்கள் இருவரும் ஜோடியாக நடிக்க வாய்ப்பு அமைந்தும் அந்தப் படங்கள் ஏதோ ஒரு காரணத்தால் உருவாகவில்லை என்று நான் வருந்தினேன். ஆனால், இப்போது குறைந்தபட்சம் என்னிடம் 'The Last Tenant' இருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

