"இந்தி தெரியாமல், பாலிவுட்டில் நிலைக்க முடியாது என சொன்னார்!" - ரஹ்மான் சொன்ன சம்பவம் | A R Rahman
ஏ ஆர் ரஹ்மான் பல மொழிகளில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர். இந்தி சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்தவர், ஆரம்ப காலங்களில் இந்தி மொழி தெரியாததால் ஏற்பட்ட சிக்கல்களை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அந்த பேட்டியில் பேசிய ஏ ஆர் ரஹ்மான், "ஒவ்வொரு மொழிக்கும் ஒரு ஆற்றல் இருக்கிறது. ஆரம்ப காலங்களில் என்னுடைய தமிழ் பாடல்கள் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. ஆனால், தமிழ் பாடல் வரிகளை அப்படியே இந்தியில் மொழிபெயர்க்கும்போது அதன் அர்த்தங்கள் மாறுதலும், ராக தாளத்தில் சேராத சிக்கல்களும் இருந்தன. இதற்கு உதாரணமாக சொல்வதென்றால், டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா என்ற பாடலை எடுத்துக் கொள்ளலாம். மணி போல் சிரிப்பவள் என்ற பதம் தமிழில் தான் இருக்கிறது. இந்தியில் இல்லை. எனவே அதனை இந்தியில் பி கே மிஷ்ரா எழுதிய போது மிக கறாரான மொழி பெயர்ப்பாக எழுதிவிட்டார்.
அதன் பின் என்னுடை பாடல்களை டப் செய்வதை நிறுத்திவிட்டேன். அதற்கான கூடுதல் தொகையும் எனக்கு வேண்டாம். உங்களுக்கு இந்தி டப் வேண்டும் என்றால் இந்திக்கு என புதிதாக எழுதி படமாக்குங்கள் என கூறினேன். `ரோஜா', `பாம்பே', தில்சே', `காதலன்' போன்றவை அப்படி முறையாக உருவானவையே. இருந்தாலும் பணம் கொடுத்தால் மற்ற மொழிகளில் டப் செய்து வாங்கிவிடலாம் என யோசித்தார்கள். ஆனால் இந்தி டப்பிங் பாடல்கள் நன்றாக இல்லை, தமிழிலேயே பாடலை கேட்போம் என மக்கள் பேச துவங்கியது எனக்கு அவமானமாக இருந்தது. அப்போது எனக்கு சரியாக இந்தி தெரியாததால் இந்தி படங்களுக்கு இசையமைப்பது, பாடல்களை இந்திக்கு மொழிபெயர்ப்பது சிக்கலாக இருந்தது.
அந்த நேரத்தில் இந்தி இயக்குநர் சுபாஷ் காய், என்னிடம், 'நீங்க ரொம்ப நல்ல இசையமைப்பாளர். இந்தி தெரியாமல், பாலிவுட்டில் நிலைத்து இருக்க முடியாது' என்றார். அது ஒரு நல்ல அறிவுரையாகத் தெரிந்தது. அதனால், சரி இந்தி கற்றுக்கொண்டேன் கூடவே உருது மொழி குரானை 1994 முதல் 1997ஆம் ஆண்டுகளில் 3 ஆண்டுகள் படித்தேன்.
இரண்டையும் ஒன்றாக படித்ததால் என் இந்தியில் அதிகம் உருதுவின் தாக்கம் இருக்கும். இந்தியும், உருதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். உருது எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்பதால் உருதைக் கற்றுக்கொண்டு, அதன்மூலம் இந்தியைக் கற்றுக் கொண்டேன். அதன்பிறகு தமிழ் பாடல்களை இந்தியில் அப்படியே மொழிபெயர்க்காமல், புதிதாக இந்தியிலேயே பாடல் வரிகளை எழுதினோம். உலகம் முழுக்க இருக்கும் இந்தி மக்களின் அன்பு அபரிமிதமானது. பஞ்சாபி கூட கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எல்லா மொழியையும், எல்லா கலாசாரத்தின் மீதும் மரியாதை இருக்கிறது." என்றார்.