"குடிப்பதை நிறுத்திய பிறகு சிறந்த மனிதனாய் உணர்கிறேன்!" - பாபி தியோல் | Bobby Deol
பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல். `பர்சாத்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பல இந்திப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். லார்ட் பாபி என செல்லமாக அழைக்கப்படும் இவர் சந்தீப் ரெட்டி இயக்கிய `Animal' படத்திற்கு பிறகு, மற்ற மொழி ரசிகர்களிடமும் பரிட்சயமானார். சூர்யாவின் `கங்குவா' மூலம் தமிழ் சினிமாவிலும், `Daaku Maharaaj' மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் குடிப் பழக்கத்தை நிறுத்தியது குறித்து பேசி இருக்கிறார்.
"நீங்கள் முன்பை விட FIT ஆக இருக்கிறீர்கள். மதுப்பழக்கத்தை நிறுத்திவிட்டீர்கள் என நம்புகிறேன்?" எனக் கேட்கப்பட அதற்கு பதிலளித்த பாபி தியோல் "ஆம், நான் நிறுத்திவிட்டேன். அது எனக்கு உண்மையிலேயே உதவிகரமாக இருக்கிறது. நாம் எல்லோரும் மரபணு ரீதியாக வேறுபட்டவர்கள், எந்த வகையான போதை, உங்களை எவ்வாறு பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. சில விஷயங்களுக்கு அடிமையாகும் வகையான மரபணுக்கள் சிலருக்கு இருக்கும். கடவுள் எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்திருக்கிறார் எனவே என்னால் சிறப்பாக என்ன செய்ய முடியுமோ அதை செய்ய நான் முடிவு செய்தேன்.
வாழ்க்கையில் இதுபோன்ற வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்காது. அந்த குரல் உள்ளிருந்து வர வேண்டும். நான் குடிப்பதை நிறுத்திய பிறகு, ஒரு சிறந்த மனிதனாக மாறி விட்டதாய் நினைக்கிறேன், மேலும் எனக்குத் தெரிந்த அனைவருடனும் எனது உறவு நூறு மடங்கு சிறப்பாகிவிட்டது என்றும் நினைக்கிறேன்" எனக் கூறியுள்ளார். பாபி தியோல் அடுத்ததாக விஜய் நடித்துள்ள `ஜனநாயகன்', அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள `Bandar' போன்ற படங்களில் நடித்துள்ளார்.

