வில்லனாக பாலிவுட் செல்லும் அர்ஜூன் தாஸ்..? | Arjun Das | Bollywood
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான அர்ஜூன் தாஸ் பாலிவுட் படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் அர்ஜூன் தாஸ். `அந்தகாரம்', லோகேஷ் கனகராஜ் இயக்கிய `கைதி', `மாஸ்டர்', `விக்ரம்' போன்ற படங்கள் மூலம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். `அநீதி', `ரசவாதி', `பாம்', `ஒன்ஸ் மோர்' போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர், அஜித்குமார் நடித்த `குட் பேட் அக்லி' படத்தில் வில்லனாக வந்து அசத்தினார். சமீபத்தில் வெளியான பவன் கல்யாணின் `OG' படத்திலும் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் வில்லனாக கலக்கியவர், தற்போது பாலிவுட்டில் வில்லனாக களம் இறங்க உள்ளார் என சொல்லப்படுகிறது. சலீம் – ஜாவேத் எழுதி சந்திரா ப்ரோட் இயக்கி அமிதாப் நடித்து 1978ல் வெளியான இந்தி படம் `டான்'. இப்படத்தின் தழுவலாக் ஜாவேத் அக்தரின் மகன், ஃபர்ஹான் அக்தர் இயக்கி ஷாரூக்கான் நடித்து இரு பாகங்களாக வெளியானது `டான்'. மேலும் டான் 3 படத்தை ரன்வீர் சிங்கை வைத்து இயக்குவதாக 2023ல் அறிவித்தார் ஃபர்ஹான் அக்தர். இதில் க்யாரா அத்வானி நாயகி எனவும் அறிவிக்கப்பட்டது.
டான் படத்தின் ரீபூட் ஆக உருவாகும் இப்படத்தில் ஒரு வில்லன் ரோலில் அர்ஜூன் தாஸ் நடிக்க உள்ளார் எனவும், இதன் படப்பிடிப்புகள் ஜனவரியில் துவங்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே மதுமிதா இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடித்த ஒரு இந்தி படம் இரண்டு வருடங்களுக்கு முன்பே உருவானது. மலையாளப் படமானா `அங்கமாலி டைரீஸ்' படத்தின் இந்தி ரீமேக் தான் இது. தற்போது டான் 3 மூலம் இன்னொரு இந்தி படத்திலும் அர்ஜூன் தாஸ் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.