மூன்றாண்டு தாமதத்துக்கு பின் வெளியாகும் அனுராக் காஷ்யப் படம்! | Anurag Kashyap
மூன்றாண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட அனுராக் காஷ்யப் இயக்கிய 'கென்னடி' படம், இந்தியாவில் நேரடியாக Zee5 ஓடிடி தளத்தில் பிப்ரவரி 20ம் தேதி வெளியாகிறது. தூக்கமின்மை பிரச்னை கொண்ட முன்னாள் காவலதிகாரி ஊழலை எதிர்த்து போராடும் கதைக்களம் கொண்ட இப்படம், கேன்ஸ் உள்ளிட்ட விழாக்களில் வெளியானது.
இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர் அனுராக் காஷ்யப். இவர் இயக்கத்தில் ராகுல் பட், சன்னி லியோன் நடித்த படம் `கென்னடி'. 2023லேயே இப்படம் தயாராகி கேன்ஸ் உள்ளிட்ட சில திரைப்பட விழாக்களிலும் வெளியானது. மேலும் சில நாடுகளில் வீடியோ ஆன் டிமாண்ட் (video on demand) முறை மூலமும் வெளியிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் மட்டும் இப்படம் வெளியாக்கமாலே இருந்தது.
இப்போது ஒருவழியாக இந்தியாவிலும் வெளியாக இருக்கிறது `கென்னடி'. ஆனால் திரையரங்கில் அல்ல, நேரடியாக ஓடிடி வாயிலாக. பிப்ரவரி 20ம் தேதி Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது இப்படம். தூக்கமின்மை பிரச்னை கொண்ட ஒரு முன்னாள் காவலதிகாரி, ஊழலை எதிர்த்து போராடுவதே, இதன் கதைக்களம். மூன்றாண்டுகளாக இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
இதற்கு முன்பு அனுராக் காஷ்யப் இயக்கி வெளியான படம் `Nishaanchi'. இரு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகத்துக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தாலும், திரையரங்கில் வரவேற்பு கிடைக்காமல் தோல்விப்படமாக அமைந்தது. எனவே Nishaanchi படம் ஓடிடியில் வெளியான அதே தினத்தில் 2ம் பாகத்தையும் ஓடிடியில் வெளியிட்டனர். இப்போது அதே போல தான் `கென்னடி' படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. சமீப காலமாக பாலிவுட் சினிமாவின் மீது அனுராக் காஷ்யப் வைக்கும் விமர்சனங்கள் காரணமாக, அவர் இந்தி சினிமாவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட நபர் போல நடத்தப்படுகிறார் என சொல்லப்படுகிறது.

