1. ஆதித்யா சோப்ரா இப்படத்தின் கதையை எழுதி முடித்ததும், தன் தந்தையும் இயக்குநருமான யாஷ் சோப்ராவிடம் சென்று "நீங்களே இதனை இயக்குங்கள்" என கூறி இருக்கிறார். ஆனால் அதனை விரும்பாத யாஷ், ஆதித்யாவையே இயக்கும்படி சொல்லி இருக்கிறார்.
2. இப்படத்தில் ராஜ் பாத்திரத்தில் ஷாரூக் நடித்து பல ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் இந்த ரோலில் முதலில் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸை நடிக்க வைக்க அணுகலாம் என இருந்தார். அமெரிக்க ஹீரோ, இந்திய பெண்ணை யூரோப்பில் சந்திக்க அவர்களுக்குள் நடக்கும் காதல் என படத்தை ஆங்கிலத்தில் எடுக்க திட்டமிட்டார் இயக்குநர் ஆதித்யா சோப்ரா. ஆனால் அவரது தந்தையும், பிரபல இயக்குநரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான யாஷ் சோப்ரா அதற்கு நோ சொல்லி இருக்கிறார். பின்பு படத்தை இந்திப் படமாக துவங்கினார்கள்.
3. இப்படத்தில் நடிக்க முதலில் ஷாரூக் கான் மறுத்திருக்கிறார். ஆக்ஷன் படங்கள் நடித்து வரும் வேளையில் சாக்லேட் பாய் ரோல் வேண்டாம் என சொல்லி இருக்கிறார். அதன் பின் சைஃப் அலிகானிடம் கேட்க அவரும் மறுத்திருக்கிறார். பின்பு ஆதித்யா மீண்டும் ஷாரூக்கிடம் சென்று, நீங்கள் பெரிய சூப்பர்ஸ்டார் ஆக வேண்டும் என்றால், பெண்களுக்கு பிடிக்க வேண்டும், அம்மாக்களுக்கு பிடித்த மகனாக மாற வேண்டும் என மனதை மாற்றி இருக்கிறார்.
4 .பாலிவுட் நடிகர் ராஜ் கபூரின் நினைவாகத்தான், இதில் ஷாரூக் கான் பாத்திரத்திற்கு ’ராஜ்’ எனப் பெயரிட்டிருப்பார் ஆதித்யா சோப்ரா.
5. 90களில் படங்களின் தலைப்புக்கள் சின்னதாக வைக்கும் வழக்கம் துவங்கி இருந்தது. ஆனால் இப்படத்திற்கு `Dilwale Dulhania Le Jayenge' என்ற தலைப்புதான் பொருத்தமாக இருக்கும் என யோசனை தந்தது நடிகையும், இப்படத்தில் ஷாருக்கின் அப்பாவாக நடித்த அனுபம் கெரின் முன்னாள் மனைவியுமான கிரோன் கெர். இதில் சுவாரஸ்யம் என்ன என்றால் இதே பெயரில் ராஜேந்திர சிங் இயக்கிய ஒரு இந்திப் படம் 1980ல் வெளியாகி இருக்கிறது.
6. இன்று பிரபல பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் கரண் ஜோஹர், DDLJ படத்தில் உதவி இயக்குநர். இப்போது சில படங்களில் நடிக்கவும் செய்யும் கரணின் முதல் படம் DDLJ தான். ராக்கி என்ற ஒரு சின்ன பாத்திரத்தில் நடித்திருப்பார்.
7. "இப்படத்தை பற்றிதான் எப்போதும் ஆதித்யா பேசுவார், அவர் மனதில் இந்தக் கதை தெளிவாக எப்போதும் இருந்தது" என கரண் ஜோகர்கூட ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார். அவ்வளவு ஆழமாக பதிந்திருந்தால் இப்படத்தின் கதையை நான்கே வாரத்தில் எழுதி முடித்திருக்கிறார் ஆதித்யா சோப்ரா.
8. இப்படத்தில் சுவிஸர்லாந்தின் பாடல இடங்களை பதிவு செய்ததால், படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு சுவிஸர்லாந்தின் சுற்றுலா பயணிகளின் வருகை பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
9. DDLJ தான் முதல் முதலில் படத்தின் மேக்கிங் வீடியோவை ஒளிபரப்பிய முதல் இந்தியப்படம். இப்படத்தின் எடிட்டிங் சமயத்திலேயே, 30 நிமிடங்களுக்கு படத்தின் உருவாக்கம் குறித்த வீடியோவை தயார் செய்திருக்கிறார்கள் கரண் ஜோஹர் மற்றும் ஆதித்யா சோப்ரா.
10. DDLJ அப்படத்தின் இசைக்காக மிகவும் கொண்டாடப்பட்ட படம். இதில் மிகவும் பிரபலமான கல்யாண பாடல் Mehendi Laga Ke Rakhna. இது முதலில் உருவாக்கப்பட்டது யாஷ் ராஜ் தயாரித்த வேறொரு படத்திற்கு. ஆனால் இதனைக் கேட்ட ஆதித்யா சோப்ரா மற்றும் அவரின் சகோதரர் உதய் சோப்ராவுக்கு இப்பாடல், பிடித்துப் போய்விட கடைசி நேரத்தில் DDLJ ல் இணைக்கப்பட்டதாம்.
11. இப்படத்தில் ஷாரூக் அணிந்திருந்த லெதர் ஜாக்கெட் யாஷின் இளைய மகன் உதய் சோப்ரா கலிஃபோர்னியாவில் ஒரு ஹார்லி டேவிட்சன் ஷோரூமில் 400 டாலருக்கு வாங்கியது. அது ஷாரூக்கின் மறக்க முடியாத அடையாளமாகிவிட்டது.
12. திரையரங்கில் அதிக வருடங்கள் ஓடிய இந்திய படம் என்ற சாதனையை வைத்துள்ள படம் `Dilwale Dulhania Le Jayenge' தான். மும்பையின் மரத்தா மந்திர் (Maratha Mandir) என்ற திரையரங்கில் 1995 - 2015 வரை இப்படம் தொடர்ந்து ஓடியது.
தியேட்டர் பராமரிப்பு காரணமாக நிறுத்தப்பட்ட இந்த திரையிடல் மீண்டும் துவங்கப்பட்டு, இப்போதுவரை தினசரி ஒரு காட்சி DDLJ ஒளிப்பரப்பப்படுகிறது.
13. புகப்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் Steven Jay Schneider எழுதிய 1001 Movies You Must See Before You Die என்ற புத்தகத்தில் மூன்றே இந்திய படங்கள் இடம்பெற்றுள்ளது. Mother India, Deewaar மற்றும் Dilwale Dulhania Le Jayenge.
14. வசூல் ரீதியாக உலகம் முழுக்க 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. 90களிலேயே இந்த வசூல் என்பது மிகப்பெரிய விஷயம்.
15. இயக்குநர் ஆதித்யா சோப்ராவின் அலுவலக அறையில் ஒரு DDLJ போஸ்டர் இருக்கிறது. அதில் என்னை மிகப்பெரிய நட்சத்திரமாக மாற்றியதற்கு நன்றி என ஷாரூக் எழுதி கையெழுத்திட்டு ஆதித்யாவுக்கு அனுப்பிட்டது.