முதல் வார வசூல் மட்டும் ரூ.1,600 கோடி! - கொரோனா காலத்திலும் 'ப்ளாக் விடோ' வசூல் சாதனை

முதல் வார வசூல் மட்டும் ரூ.1,600 கோடி! - கொரோனா காலத்திலும் 'ப்ளாக் விடோ' வசூல் சாதனை
முதல் வார வசூல் மட்டும் ரூ.1,600 கோடி! - கொரோனா காலத்திலும் 'ப்ளாக் விடோ' வசூல் சாதனை

கொரோனா பேரிடர் காலத்திலும் மார்வெல் திரைப்படமான 'ப்ளாக் விடோ'-விற்கு கிடைத்துள்ள உலகளாவிய வரவேற்பு படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மார்வெல் நிறுவன தயாரிப்பில் வெளியாகி இருக்கும் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படம் 'ப்ளாக் விடோ'. நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் 'ப்ளாக் விடோ'வாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த ஆண்டே இந்தப் படம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

பல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பின்னர் ஓடிடி மற்றும் தியேட்டர் என இரண்டிலும் இந்தப் படம் வெளியாகும் என சமீபத்தில் மார்வெல் நிறுவனம் அறிவித்தது. அதற்கு காரணம், சில நாடுகளில் தியேட்டர்கள் திறக்கப்படமால் இருக்கும் நிலையில், அமெரிக்கா உட்பட கொரோனா பாதிப்பு குறைந்த நாடுகளில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதையடுத்தே ஜூலை 9-ம் தேதி ஓடிடி வெளியீட்டுடன் சேர்ந்து சில நாடுகளில் தியேட்டர்களிலும் வெளியானது. இந்த வெளியீட்டின் மூலம் ‘தியேட்டரில் வெளியான அதே நாளில், ஓடிடியிலும் வெளியான முதல் மார்வெல் திரைப்படம்’ என்ற பெருமையை இத்திரைப்படம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, இந்தப் படத்துக்கு சில வாரங்கள் முன் வெளியான 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9' திரைப்படம், அமெரிக்க திரையரங்குகளில் 70 மில்லியன் டாலர் வசூலித்தது சாதனையாக இருந்து. ஆனால் தற்போது 'ப்ளாக் விடோ' படம் அமெரிக்காவில் மட்டும், வெளியான மூன்று நாட்களில் மொத்தம் 80 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை புரிந்தது. இதே நாட்களில் மற்ற நாடுகளில் 78 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்துள்ளது.

மூன்று நாட்களில் இது என்றால், வார இறுதிக்குள் 215 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,600 கோடி) இந்தப் படம் வசூலிக்கும் என்று டிஸ்னி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதில் அமெரிக்கா மற்றும் கனடாவிலுமிருந்து 80 மில்லியன் டாலரும் (சுமார் ரூ.595 கோடி), உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளிலிருந்து 78 மில்லியன் டாலரும் (சுமார் 580 கோடி ரூபாய்) வசூலித்து இருக்கிறது. இதுமட்டுமில்லாமல், டிஸ்னி+ ஓடிடி தளம் மூலமாகவும் இந்தப் படம் 60 மில்லியனுக்கும் அதிகமான (சுமார் ரூ.446 கோடி) தொகையை வசூலித்து இருக்கிறது.

டிஸ்னி+ ஓடிடி தளத்தில் ப்ரீமியம் சேவையில் இந்தப் படத்தை பார்க்க முடியும். இதற்காக 30 டாலர்கள் செலுத்த வேண்டும். இந்த தொகை மூலமாக ரூ.446 கோடி வசூலித்துள்ளது என்று டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, இந்தப் படம் இன்னும் மார்வெல் படங்களின் முக்கிய சந்தையான சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகள் சிலவற்றில் வெளியாகவில்லை. இந்த நாடுகளில் வெளியாகும் பட்சத்தில் இன்னும் அதிகமான வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 'ப்ளாக் விடோ' அக்டோபர் மாதம் 6ஆம் தேதி வெளியாகவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com