“மம்தா படம் மீது நடவடிக்கை எடுங்கள்” - தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்

“மம்தா படம் மீது நடவடிக்கை எடுங்கள்” - தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்
“மம்தா படம் மீது நடவடிக்கை எடுங்கள்” - தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘பாகினி’ என்ற
திரைப்படத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாஜக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகும் என
அறிவிக்கப்பட்டிருந்தது. 

அரசியல் நோக்கத்துடன் படம் வெளியிடப்படுவதால் இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றம் மற்றும் டெல்லி,
மும்பை நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்குகளை
நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தது. 

இதையடுத்து படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழ் வழங்காததால், படத்தை வெளியிடுவது
குறித்து நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மேலும் படம் வெளியாவது விதிமீறலா என்பதை தேர்தல்
ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 11ம் தேதி படத்தை வெளியிட
படக்குழு முடிவு செய்திருந்தது. இந்த முடிவுக்கு தடை விதித்து கடந்த 10ஆம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், மேற்குவங்க முதலமைச்சர்
மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘பாகினி’ என்ற திரைப்படத்தின் மீது நடவடிக்கை
எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. 

இந்தப் படம் மக்களவைத் தேர்தலையொட்டி மே 3ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப்
படத்தின் மீது எடுத்த நடவடிக்கையை ‘பாகினி’ படத்தின் மீதும் எடுக்க வேண்டும் என  அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com