‘வருங்கால முதல்வருக்கு வாழ்த்துகள்’: விஜய்க்கு அடிபோடுகிறது பாஜக?
‘வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி. சேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று பாஜகவின் தேசியத் தலைவர்கள் முதல் தமிழக தலைவர்கள் வரை அனைவரும் அழைத்துக் களைத்துவிட்டனர். மேடையில் அரசியல் பேசும் ரஜினிகாந்த், பத்திரிகையாளர்களிடம் அரசியல் பேசாதீர்கள் என்ற ஒற்றை பதிலை மட்டுமே கூறிவருகிறார். அரசியல் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. அவர் தான் நடிக்கும் காலா படத்திலும், 2.O படத்திலும் பிஸியாக இருக்கிறார். அடுத்த ஆண்டு வரை அவருக்கு அந்த வேலையே சரியாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி. சேகர், ‘வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று ஒரு வீடியோவில் பேசி அதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “இளைய தளபதி விஜய் தனது கடின உழைப்பால் படிப்படியாக முன்னுக்கு வந்தவர். விஜய்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் வர வேண்டும். அரசியலுக்கு சினிமா நடிகன் வரக்கூடாது என்று சொல்கிற வார்த்தைகள் எல்லாம் பயத்தில் சொல்லும் வார்த்தைகள். நல்லவர்கள், நேர்மையானவர்கள், மக்களுடைய கஷ்டம் தெரிந்தவர்கள், வர வேண்டும். விஜய் எப்போது வர வேண்டும் என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும். நல்லவர்களுக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. உங்கள் கட்சிக்கு வந்துவிடுவேன் என்று பயப்பட வேண்டாம். எனவே, வருங்கால முதல்வருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அவர் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியை காட்டி வருகிறார். விருது நிகழ்ச்சி ஒன்றில் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் பேசிய நடிகர் விஜய், தனது அடுத்த படமான மெர்சல் படத்தில் தனது பெயருக்கு முன்னால் தளபதி என குறிப்பிட்டுள்ளார். இத்தனை நாட்களாக இளைய தளபதி என குறிப்பிடப்பட்ட விஜய், தற்போது தளபதி என குறிப்பிட்டப்படுவது அரசியலுக்கு வருவதற்கான அறிகுறி என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.
நடிகர் விஜய் தனது 43-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது 61-வது படத்தின் பெயர் மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனையடுத்து பல்வேறு பிரபலங்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.