நடிகை சோனாலி பிந்த்ரே பற்றி ஷாக் பதிவு: பாஜக எம்.எல்.ஏவால் மீண்டும் சர்ச்சை!
நடிகை சோனாலி பிந்த்ரே பற்றி அதிர்ச்சி பதிவு வெளியிட்ட பாஜக எம்.எல்.ஏ, பின்னர் அந்தப் பதிவை நீக்கிவிட்டார்.
மும்பையை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது நடந்த உறியடி விழாவில், இளைஞர்கள் விரும்பும் பெண்களை கடத்தி ஒப்படைப்பதாகக் கூறி சர்ச்சையில் சிக்கினார். அந்தச் சூடு ஆறுவதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, ’புகழ்பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மரணத்திற்கு எனது இரங்க லை தெரிவித்து கொள்கி றேன்’ என்று எம்.எல்.ஏ ராம் கதம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
உயிரோடு இருக்கும் நடிகைக்கு இரங்கல் செய்தி வெளியிட்ட அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து உடனடியாக தன் பதிவை நீக்கிய அவர், ‘நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவர் ஆரோக்கியமான உடல்நிலையை பெறவும், விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார்.