விஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும்?  - டாப் 5 காரணங்கள்

விஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும்?  - டாப் 5 காரணங்கள்

விஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும்?  - டாப் 5 காரணங்கள்
Published on

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி உள்ள ‘பிகில்’ திரைப்படத்தை ஐந்து காரணங்களுக்காக பார்க்க வேண்டும். அந்த 5 காரணங்கள் என்ன?

நடிகர் விஜய் நடித்துள்ள 63வது திரைப்படம் ‘பிகில்’. இந்தப் படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான பூஜை முடிவான அன்றே தீபாவளிதான் ரிலீஸ் என முடிவு செய்திருந்தது படக்குழு. அதற்கு காரணம், தீபாவளிக்கு  தன் ரசிகளுக்கு தக்க பரிசாக ‘பிகில்’ படத்தை கொடுக்க வேண்டும் என்ற விஜயின் அடக்க முடியாத ஆசை.

அத்துடன் கடந்த சில வருடங்களாக விஜய்க்கு தீபாவளி செண்டிமெண்ட் சரியாக ஒர்க் அவுட் ஆக தொடங்கி இருப்பதுதான். கடைசி நேரம் வரை படம் வருமா? வராதா? என ‘வெறித்தனமாக’ காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு இறுதிக் கட்டத்தில் தீபாவளி இனிப்பாக வெள்ளித்திரையில் வேகம் எடுப்பார் விஜய். அந்த த்ரில் அனுபவத்திற்கு அவரது ரசிகர்கள் பழக்கமாகி விட்டார்கள். ஆகவே இந்தத் தடைகள் எல்லாம் டானிக் சாப்பிடுவதை போலதான்.

சரி, ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும்? முதல் காரணம், ‘கில்லி’க்கு பிறகு ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான படத்தில் விஜய் நடித்திருக்கிறார். நீண்ட காலத்திற்குப் பிறகு மைதானத்தில் மனநிலையை செலுத்தி இருக்கிறார் விஜய். மேலும் இது அட்லியின் படம். அதாவது அண்ணன் தம்பிக்கு தந்துள்ள அன்பு பரிசு. முதலில் விஜயிடம் கதை சொல்ல போன அட்லி ராசியான சட்டையை நம்பினார். இறுதியில் சட்டை செட் ஆகாமல் போக முடிவில் அண்ணனே அட்லியிடம் செட்டில் ஆன கதையை அவர் ஆடியோ வெளியிட்டின்போதே கூறி இருந்தார். அந்த கெமிஸ்ட்ரி எப்படி வேலை செய்திருக்கிறது என பார்ப்பதற்காக முதலில் பார்க்க வேண்டும். அதே போல ‘சர்கார்’ சரியான மாஸ். அதற்கு அடுத்து வெளியாகும் படம். இது மாஸா? அல்லது பக்கா மாஸா என பார்க்க விரும்புபவர்கள் இதனை பார்க்கலாம்.  

இதில் இன்னொரு விஷயம் மிக முக்கியம். முருகதாஸ் மூத்த இயக்குநர். அட்லி இளம் இயக்குநர். ஒரு சீனியர் கையில் உருவான படத்திற்கு அடுத்து வரப் போகும் இளம் இயக்குநர் படத்திற்கு வித்தியாசம் எப்படி இருக்கிறது என பார்க்க வேண்டாமா? ஆகவே அதை பார்க்க வேண்டும். இதை எல்லாம் விட இந்தப் படத்தில் விஜய் ஃபுட்பால் கோட்சாக நடித்துள்ளார். ‘கில்லி’ படத்திற்குப் பிறகு  விளையாட்டை மையமாக வைத்து விஜய் நடித்துள்ள படம். ‘கில்லி’யில் விஜய் தெறிக்கவிட்டிருப்பார். இப்போது ‘தெறி’ இயக்குநர் கையிலேயே விஜய் அகப்பட்டிருக்கிறார், ஆகவே இதை அவசியம் திரை ரசிகர்கள் பார்த்தாக வேண்டும். 

இரண்டாவது காரணம், ஹிட் மேக்கர் அட்லீ. 

இயக்குநர் அட்லீ மீது சில விமர்சனங்கள் உண்டு. அவரது படங்கள் ஏதோ ஒருவகையில் தழுவலாக இருக்கிறது எனப் பலரும் கூறி வருகின்றனர். ‘பிகில்’ வெளியாவதற்கு முன்பாகவே சிலர் சமூக வலைத்தளத்தில் ‘பிகில்’ ட்ரெய்லரை சம்பந்தப்படுத்தி சில ஒப்புமைகளை பேசத் தொடங்கிவிட்டனர். ஆகவே அவர் எந்தக் கதையை ஒட்டி இதனை எடுத்திருக்கிறார் என பார்க்க விரும்புகிறவர்கள் நிச்சயம் பார்த்தாக வேண்டும். அட்லீயின் ‘மெர்சல்’ படத்தில் மூன்று தோற்றங்களில் விஜய் நடித்திருந்தார்.

அதனை அடுத்து ‘பிகில்’ படத்தில் மூன்று பார்த்திரங்களில் தோன்றுகிறார். மூன்று முகங்களை வடிவமைப்பதில் அட்லீ எப்படி கைதேர்ந்திருக்கிறார் என கவனிக்க விரும்புகிறவர்கள் இந்தப் படத்தை பார்த்தே ஆக வேண்டும். 

மூன்றாவது காரணம் நயன்தாரா. விஜய் படங்களில் நடிக்கும் போது, நயன்தாராவுக்கு ஒரு தனி அடையாளம் கிடைக்கும். இவர்கள் இருவரும் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக சேர்ந்து திரையை பகிர்ந்து கொண்டுள்ளனர். சரியாக ‘வில்லு’ படத்திற்கு பிறகு ‘பிகில்’ பக்கத்திற்கு இந்த இருவரும் வந்து சேர்ந்துள்ளனர். ஒரு லேடி சூப்பர் ஸ்டாரும் ஒரு மாஸ் சூப்பர் ஸ்டாரும் இணைந்துள்ள படம் ‘பிகில்’ என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஆகவே நயன் ரசிகர்கள் வித் விஜய் ரசிகர்கள் என வெற்றிக் கூட்டணியின் கொலாப்ரேஷனில் உருவான கதை என்பதால் அவசியம் பார்க்க வேண்டும் என்கிறார்கள் இந்த இருவரின் ரசிகர்கள். இதை மீறி இன்னொரு காரணம் உண்டு. அட்லீ இயக்கத்தில் நயன் வந்தாலே அது தனி அழகு. ‘ராஜா ராணி’யில் அவர் திரையில் வாழ்ந்திருப்பார். அந்த அழகு இந்தப் ‘பிகில்’ படத்தில் வெளிப்படும் என நம்பிக்கை உள்ளவர்கள் இதை பார்க்க விரும்புகிறார்கள்.


 
நான்காவது காரணம் எல்லாவற்றையும் விட பெரியதானது. ஆம்! இந்தப் படம் பெண்கள் ஆடும் ஃபுட்பாலை மையமாக வைத்து உருவாகி உள்ளது. பல பெண்கள் விஜயுடன் திரையை பகிர்ந்துள்ளனர். அதில் பாதி பேர் முறைப்படி கால்பந்தாட்டம் அறிந்தவர்கள். ஒரிஜினல் மைதானம், ஒரிஜினல் வீரர்கள் என பல நல்ல விஷயங்கள் நிறைந்துள்ள படம் ‘பிகில்’. அதற்காக ஒரு ஆர்ட் ஃபிலிம் என சொல்லவில்லை. கமர்ஷியல் ஹீரோவின் தர வரிசையில் பார்க்க வேண்டிய படம். மேலும் தமிழ் சினிமாவின் தனித்துவமான பின்புலம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது.

இறுதியாக ஐந்தவது காரணம்?  ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு மற்றும் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ். விஷ்ணு தன்னுடைய குறுகிய கால படங்களை வைத்தே நிறைய நல்ல பெயரை சம்பாதித்திருக்கிறார். இந்தப் ‘பிகில்’ ஸ்போர்ட்ஸ் படம் என்பதால் கேமிரா விஷயத்தில் விளையாடி இருக்கிறார் என தகவல் கிடைக்கிறது. 

ஒரு ஸ்போர்ட்ஸ் படத்தை காட்சி படுத்துவது லேசான காரியம் இல்லை. பார்வையாளர்கள உற்சாக ஏணியில் அப்படியே உட்கார வைக்க வேண்டும். அதற்கு நிறைய சவால்கள் உள்ளன. அதை எப்படி விஷ்ணு சமாளித்திருக்கிறார் என அறிய விரும்புகின்றவர்கள் முதல்நாள் முதல் ஷோவில் போய் உட்கார்ந்துவிடுவார்கள். இந்த ஒளிப்பதிவுக்கு இணையாக உழைக்க வேண்டிய துறை ஆர்ட் டிபார்ட்மெண்ட். ஒரு மாஸ் ஹீரோவை வைத்து முத்துராஜ் வேலை செய்ய மூச்சு விடாமல் உழைத்துள்ளார். விஜயை வைத்து படம் எடுத்து முடிப்பதற்கு எவ்வளவு சிரமங்களை அவரது ரசிகர்கள் முத்துராஜ்க்கு ஏற்படுத்தி இருந்தனர் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஆகவே இந்த இருவருக்காகவும் பார்க்க வேண்டும்.

இந்த ஐந்து காரணங்கள் முக்கியமானவைதான். இதை எல்லாம் மீறி தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒரு காரணம் இருக்கிறது. அது ஒன் அண்ட் ஒன்லி வேறு யாராக இருக்க முடியும். தளபதி விஜய்தான்.  ‘சர்கார்’ தமிழக அரசியல் வட்டாரத்தை ஆட்டி வைத்தது. ‘மெர்சல்’ அதைவிட மேலே போய் ராகுலையே பேச வைத்தது. இந்த ‘பிகில்’ இன்னும் யாரை எல்லாம் பேச வைக்க போகிறதோ? 

ஆனால் ஒன்று மட்டும் உறுதி, விஜய் வழக்கம் போல எந்தச் சர்ச்சைக்கும் பதில் பேச போவதில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com