பிக்பாஸில் 56ம் நாள்.
விமர்சனம் விஷமா? கமல் சொன்ன விளக்கம்
வழக்கம் போல் கமல் வந்து விமர்சனத்தை பற்றிய கருத்தை கூறுகிறார். “விமர்சனம் என்பது நாம் பிறர்மேல் வைப்பது, ஆனால் பிறர் நம்மை விமர்சித்தால் நமக்கு பிடிக்காது. அதற்கு பிக்பாஸ் வீட்டினரும் விதிவிலக்கல்ல... விமர்சனம் என்பது ஒரு ஆளை மேம்படுத்தும் கண்ஸ்டக்டிவ் கிரிட்டிஸிஸமாக இருக்க வேண்டுமே தவிர, ஆளை காலி பண்ணும் விமர்சனமாக அது இருக்கக்கூடாது. அது விமர்சனம் இல்லை விஷம்” என்று கூறி அகம் டீவி வழியாக அகத்திற்குள் செல்கிறார்.
”இந்தவீட்டில் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரு நபர் யார்?” என்று கேட்கிறார் கமல்
நிக்சன்: அர்ச்சனா அக்கா,
ஜோவிகா: அர்ச்சனா,
தினேஷ் : விசித்திரா,
மணி: அக்ஷயா,
கூல் சுரேஷ்: அக்ஷ்யா,
ரவீனா: அர்ச்சனா அக்கா,
விஷ்ணு: மாயா,
விக்ரம்: அர்ச்சனா,
பூர்ணிமா: கூல்சுரேஷ்,
மாயா: அர்ச்சனா,
அக்ஷயா: விசித்திரா மேம்,
விசித்திரா: ஜோவிகா,
அர்ச்சனா: பூர்ணிமா என்று சொல்கிறார்கள்..
அர்ச்சனா, விஷ்ணு மோதல்
அர்ச்சனா எழுந்து விமர்சனத்திற்கு ஒரு விளக்கம் தருகிறார். ”நான் ஒருவருக்கு விமர்சனம் கொடுக்கும்பொழுது அதில் ஒரு நல்ல செய்தியை வைத்து தான் சொல்லுவேன். ஆனா என்னை தொட்டா சிணுங்கி அழு மூஞ்சின்னு சொல்றாங்க. நா இந்த வீட்டிற்குள் வந்து ஒரு வாரம் தான் அழுதேன். அதற்கு பிறகு அழல... ஆனா அதையே சொல்லி காட்டுறாங்க. நான் செய்த வேலையை டாஸ்கை சொல்றது இல்லை” என்று சொன்ன சமயத்தில்,
விஷ்ணு எழுந்து, அர்ச்சனாவுக்கு இந்த பெயரை வைத்தது தான் தான் என்று தனது காலரை தூக்கி விட்டுக்கொள்கிறார். பிறகு, ”அர்ச்சனா இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து எந்த வேலையும் செய்யலை“ என்கிறார். பதிலுக்கு அர்ச்சனா விஷ்ணுவை, “இவரும் இந்த வீட்டுல என்ன பண்றார்னு தெரியலை” என்று கமலுக்கு முன்பாகவே இருவரும் ஒருவருக்குள் ஒருவர் அடித்துக்கொள்கின்றனர்.
கமலின் கோபம்
இதில் கொஞ்சம் கோபமடைந்த கமல், “நான் எதைஎதை எல்லாம் விமர்சிக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய கூடாது. உங்க நடவடிக்கைகளை நாங்க பார்த்துட்டு இருக்கோம். இந்த வார கடைசியில் கமல் இதை கேட்கலை என்றால் பாருங்கன்னு சொல்றீங்க... என்ன பண்ணிடுவீங்க என்னை? நா உங்க கூட விளையாட வரல... உங்க வாழ்க்கையை மேம்படுத்த வந்திருக்கேன். நானும் சம்பளம் தான் வாங்குகிறேன். நீங்களும் சம்பளம் தான் வாங்குகிறீங்க... உங்க கடமைக்கும் வேலைக்கும் மரியாதை கொடுங்க... இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டு கையெழுத்து போட்டுதானே இங்க வந்து இருக்கீங்க... அதற்கு ஏற்றாபோல் நடந்துக்குங்க.. நீங்க, நான் என்ன சொல்லனும்னு டயலாக் எழுதி கொடுக்காதீங்க...” என்று போட்டியாளார்களை கடுமையாக தாக்கியவர்,
நம்மிடையே திரும்பி, ”நீங்க கொடுக்குற விமர்சனத்தை உன்னிப்பாக கவனிப்பேன். அதில் எனக்கு கோபம் வராது. ஏன்னா, நான் மீம்கோ, மேம்கோ பயப்பட மாட்டேன். ஒரு செய்தியை நம்புகிறேன் என்றால் நான் அதை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்து அதன் பிறகு தான் அதை நம்புவதா வேண்டாமா என்று முடிவெடுப்பேன். நான் நம்பாத ஒரு விஷயத்தை நிறைய ஆராய்ச்சி செய்து அதில் நான் திருப்தி அடைந்த பிறகு தான் அதைப்பற்றி உங்களிடம் சொல்வேன். அதை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் உங்களின் விருப்பம். “ என்று நம்மிடமும் கொஞ்சம் ஆவேசமாக தான் பேசினார்.
இத்தனையும் கமல் அறிவுரையாகச் சொல்லி சென்றும் இச்செய்தி அர்ச்சனா காதிலோ அல்லது விஷ்ணு காதிலோ விழுந்தது போல தெரியவில்லை. இருவரும் மீண்டும் விட்ட இடத்திலிருந்து சண்டையை ஆரம்பித்தனர். இதற்கு பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாம் மொமண்ட்.
எல்லா சீசனிலும் சாப்பாட்டு சண்டை பெரிய சண்டையாகிறது பிக்பாஸ் வீட்டில். எல்லோரும் அவரவர் வீட்டில் எப்படி சாப்பிடுவார்கள் என்று தெரியாது. பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததும், நாங்களெல்லாம் பிறக்கும் போது சில்வர் ஸ்பூனுடன் தான் பிறந்தோம் என்பது போல ஒரு பில்டப்பை தருகிறார்கள். இந்த முட்டை சண்டையை நாம ஏன் பெருசா தெரிஞ்சுகிட்டு.. அடுத்த கட்டத்துக்கு போகலாம்.
அர்ச்சனா, விஷ்ணுவிடம் “நான் உன்னைவிட பெட்டர் “ என்கிறார். அதற்கு விஷ்ணு ”அப்படியா அப்படின்னா, நெத்தியில் எழுதி ஒட்டிக்கோங்க” என்று சொல்றார். ஏற்கனவே இவர் பிக்பாஸுக்கு விதிமீறுபவர்கள் எப்படியெல்லாம் தண்டிக்கலாம் என்று சில ஐடியாக்கள் கொடுத்ததாகவும், அதையெல்லாம் பிக்பாஸ் எக்ஸல் ஷீட்டில் எழுதி வைத்திருப்பதாகவும் கூறிய நிலையில், இப்பொழுது அர்ச்சனாவை பார்த்து நெத்தியில் எழுதி ஒட்டிட்டு போங்க... என்று சொன்னதை பிக்பாஸ் கவனித்து இருக்கவேண்டும், அடுத்த டாஸ்கில் எல்லோர் நெற்றியிலும் பிக்பாஸ் எழுதி ஒட்டிவிட்டார்.
பிறகு கமல் வந்து வைல்ட்கார்ட் ரவுண்டில், மீண்டும் விஜய்யை உள்ளே அனுப்பினார். ஏற்கனவே ப்ரதீபை தூக்கிப்போட்டு உடைத்தவர் விஜய், அதை மறக்காமல் இருக்கவோ என்னவோ அனைத்து போட்டியாளார்களின் குறைகள் என்னென்ன என்பதை அவர்களிடம் சொல்லி அவர்கள் முகம் பதித்த டைல்ஸை சுத்தியால் உடைக்க வேண்டும். விடுவாரா... அவருக்கு பிடித்த கேம்மாச்சே சல்லி சல்லியா உடைத்தெரிந்தார்.
மனோகர் மல்கோன்கர் என்பவர் எழுதிய ”A Bend in the ganges” என்ற புத்தகத்தை பரிந்துரைத்து விட்டு அகத்துக்குள் சென்றுவிட்டார். அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் அக்ஷயா என்றதும், அனைவரும் அக்ஷயாவை வழியனுப்பி வைத்தனர்.
அக்ஷயாவிற்கு பதிலாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அனன்யா மீண்டும் உள்ளே வந்தார். விஜய் போன்று அனன்யாவுக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி அவர் யாருக்கு ஒரு பட்டத்தை கொடுக்கிறாரோ அப்பட்டத்தை குறிப்பிடப்பட்டவர்கள் தங்களின் நெற்றியில் அணிந்து கொள்ள வேண்டும். அதன்படி விசித்திராவுக்கு நரி பட்டத்தையும், கூல் சுரேஷூக்கு கொசு பட்டத்தையும், மாயாவுக்கு விஷபாட்டில் பட்டத்தையும், கிரிஞ்ச் பட்டத்தை நிக்ஷனுக்கும், பப்பட் பட்டம் ரவீனாவுக்கும், மிக்சர் பட்டம் விக்ரமுக்கும், சொம்பு பட்டத்தை அர்ச்சனாவுக்கும், பர்சனல் செக்யூரிட்டி விஷ்ணுவிற்கும் காலி பாத்திரம் பட்டத்தை ஜோவிகாவுக்கும், தவளை பட்டத்தை பூர்ணிமாவுக்கும், பூமர் பட்டத்தை மணிக்கும், தேள் பட்டத்தை தினேஷூக்கும் கொடுத்தார்.
நான் சொல்லும் வரை நீங்கள் இதை தலையிலிருந்து கழற்ற கூடாது என்று பிக்பாஸ் சொல்லிவிட்டார். நெற்றியில் பட்டத்துடன் வீட்டை வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர் பிக்பாஸ் போட்டியாளார்கள். இனி நாளை என்ன நடக்க இருக்கிறது என்பதை பார்க்கலாம்.