`பிக்பாஸ்’ இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்தாண்டு பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதற்கு முன் இந்தியில் மட்டுமே ஒளிபரப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு தமிழ் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு நிலவியது. அதுவும் அந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்றவுடன் எதிர்பார்ப்பு கூடுதலாகவே இருந்தது. பங்கேற்பவர்கள் என சமூக வலைத்தளங்கள் பல பட்டியல்களை வெளியிட்டன. ஆனாலும் கடைசிவரை பங்கேற்பவர்கள் பட்டியல் வெளியிடாமல் இருந்து நிகழ்ச்சி தொடங்கும் முன்னர்தான் சம்மந்தபட்ட தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ பெயரை வெளியிட்டது.
விமர்சனங்களுக்கு குறைவில்லாமல் சென்ற இந்த நிகழ்ச்சி கமல்ஹாசன் அரசியல் வாழ்க்கைக்கு பெரிதும் உதவியதாக சொல்லப்பட்டது. கமல் அரசியல் பிரவேசம் செய்துள்ளதால் வெற்றிகரமாக சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி எழுந்தது. எனினும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்குவார் என்கிற மாதிரியான செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகிய நிலையில் இன்று காலை முதல் ட்விட்டர் பக்கத்தில் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுவார் என தகவல்கள் வந்தன. அதேபோல் இன்று ‘மீண்டும் மக்களைச் சந்திக்க வருகிறேன்’ என குறிப்பிட்டு இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டத்தையும் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.