“இதற்கு மேல் அந்த வீட்டில் இருக்க முடியாது?”- ‘பிக்பாஸ்’
நீங்கள் பார்த்தது ஒரு மணி நேரம் தான், ஆனால் 24 மணி நேரமும் நாங்கள் சண்டை தான் போட்டுக்கொண்டிருந்தோம் என ‘பிக்பாஸ்’ரம்யா தெரிவித்துள்ளார்.
‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறியது தொடர்பாக பாடகி என்.எஸ்.கே ரம்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நான் முதலில் உங்கள் எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பிக்பாஸில் இருக்கும் வரை, எனக்கு நீங்கள் இவ்வளவு ஆதரவு தந்தது தெரியாது. ஒரே ஒரு விஷயம்தான் என் நினைவில் இருந்தது. நான் நானாக இருக்க வேண்டும். நடிக்கக்கூடாது. ஒருவரை பற்றி பின்னால் பேசக்கூடாது. இந்த விஷயங்களில் நான் கவனமாக இருந்தேன். இருப்பினும் சில இடங்களில் கோபப்பட்டேன். எனக்கு அது நியாயமான விஷயங்களாக இருந்ததால் நான் கோபப்பட்டேன். அதையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு, நான் எவ்வளவு உண்மையானவள் என்பதை நீங்கள் புரிந்துகொண்டதால் நான் மகிழ்ச்சியடைந்தேன்.
நிறைய பேர் எனக்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர். பலர் நான் வெளியேற்றப்பட்டதற்கு வருத்தப்பட்டுள்ளனர். இதற்கு மேல் என்னால் அந்த வீட்டில் இருந்திருக்க முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் போட்டியாக இருக்கட்டும், பொறாமையாக இருக்கட்டும் எல்லாமே அந்த வீட்டில் நடந்துக்கொண்டிருந்தது. எல்லாவற்றையும் தாண்டி நிறைய சண்டைகள் நடக்கும். நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான். ஆனால் 24 மணிநேரமும் நாங்கள் அதைத்தான் அனுபவித்துக் கொண்டிருந்தோம். ரொம்ப கஷ்டமாக இருந்தது. எனவே எனக்கு வெளியே வந்த மிகவும் சந்தோஷம்தான்” என்று தெரிவித்துள்ளார்.