சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!

சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!

'ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு அரசு சம்பளம் வழங்குவேன்' என்று ஒரு மேடையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பார். நீங்கள் அந்தக் காணொலியை பார்த்திருக்கலாம். இந்தப் படத்தின் இயக்குனர் லக்‌ஷ்மணும் அதைப் பார்த்திருக்கக் கூடும். அந்த வீடியோவைப் பார்த்த பலரும் மறந்து போயிருக்கலாம். ஆனால், இயக்குநர் ஷக்‌ஷமணுக்கோ அந்தப் பேச்சுதான் ஒரு சினிமாவுக்கான விதையாக இருந்திருக்குமோ என்று எண்ணும் அளவுக்கு இருக்குகிறது, இன்று பொங்கல் சிறப்பாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் 'பூமி' படம். இது, நடிகர் ஜெயம் ரவியின் 25-வது திரைப்படம்.


ஆனால், 'பூமி'யை முழுவதும் பார்த்து முடித்தபின் நினைவுக்கு வருவது என்னவோ, இந்தியில் ஷாரூக்கான் நடித்து கவனம் ஈர்த்த 'ஸ்வதேஸ்' என்னும் படம்தான். நாசாவில் பணிபுரியும் ஒருவர் தனது சொந்த ஊருக்கு வந்து, அந்த ஊரின் தண்ணீர் பிரச்னையை சரிசெய்துவிட்டு, இறுதியில் ஊரிலேயே தங்கிவிடுவார். அந்தக் கதையை அப்படியே எடுத்தாண்டதுபோல் தண்ணீர் பிரச்னைக்குப் பதிலாக விவசாயிகளின் பிரச்னைகளையும், அவர்களின் கஷ்டங்களையும் ஆங்காங்கே மழைச்சாரல் போல தூவி, இடையில் 'கார்ப்பரேட்டுக்கள் உலகையே அழிக்கப் பிறந்தவர்கள்' என்பதை 'மெயின் டிஷ்' ஆக நுழைத்து, நமக்கு பரிமாறி இருக்கிறார்கள்.

உணவுப்பொருளில் கலப்படம் இருந்தாலே வாய்க்கு ருசியாக இருக்காது. இங்கு உணவே கலப்படத்தை உச்சமாக இருந்தால் விளங்குமா? அந்தோ பரிதாபமாக இருக்கிறது படம். படத்தின் ஆதிப் பிரச்னையே கதைக்களம்தான். 'யாராவது ஒருவர் இந்தப் படத்தின் காட்சிகள் எல்லாம் எந்த ஊரில் நடக்கிறது என்று கண்டுபிடித்து கூறிவிட்டால், அவருக்கு என் ராஜ்ஜியத்தில் பாதியை தரலாம்' என்றிருக்கிறேன்.

ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவன் என்று நாயகன் அறிமுகமாகிறார். விவசாயமே அந்த ஊரின் உயிர்மூச்சு என்றும் சொல்கிறார். அவர் ஊருக்குள் வரும்பொழுது மக்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டுகிறார்கள். விவசாயம் செய்ய கூட்டம் கூட்டமாக போகிறார்கள். ஆனால், பயிர்கள் எல்லாம் காய்ந்து கருகிப் போனதால் நஷ்டஈடு கேட்டு தம்பி ராமையா போராட்டம் செய்கிறார். அதுவும் அதே கிராமத்தில். எல்லா நிலங்களும் பிளாட் போட்டு விற்பதாக பெயர்ப்பலகை இருப்பதும் அதே கிராமத்தில்தான். மக்களெல்லாம் விவசாயத்தை விட்டுவிட்டு கார் தொழிற்சாலையிலும், ஜீன்ஸ் தொழிற்சாலையிலும் வேலை பார்ப்பதாக சொல்லப்படுவதும் அதே கிராமத்தில். அப்படி எந்த கிராமம் இந்தியாவில் இருக்கிறது என்று படம் ஆரம்பித்ததில் இருந்து தேடித்தேடி அலுத்துப்போன வேதனையை ரசிகர்கள் உணர வாய்ப்பு அதிகம்.

ஒருநாள் விடிந்து மொபைல் போனை கையில் எடுத்தால், அதில் ஆயிரம் வாட்ஸ் அப் ஃபார்வேர்டு செய்திகள் இருக்கும். வழக்கமாக அதையெல்லாம் படித்து உடனே அழித்துவிடும் பழக்கமோ அல்லது அதை படித்ததுமே மறந்துவிடும் பழக்கமோ நம்மில் பலருக்கும் உண்டு. காரணம், அதில் நூற்றுக்கு 99 செய்திகள் ஆதாரமற்றவை. போலியானவை. உண்மைக்குப் புறம்பானவை. அவற்றில் உண்மையில்லை என்று அறிய நாம் கூகுள் சென்று ஒரு நிமிடம் செலவழித்தால்கூட போதும், ஓரளவு சரியான தகவல்களைக் கண்டடைய முடியும். ஆனால், ஆனால் 'பூமி' இயக்குநரோ அந்த ஒரு நிமிடத்தை கூட வீணடிக்க விரும்பாமல் அப்படியே அந்த ஃபார்வேர்டு செய்திகளை எல்லாம் திரைக்கதை - வசனமாக மாற்றி இருக்கிறாரோ என்ற சந்தேகமே எழுகிறது.

உதாரணத்திற்கு, ஒரு கார் தயாரிக்க ஐந்து லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை என்று படத்தில் ஒரு வசனம் வருகிறது. ஆனால், இதுகுறித்த நம்பகமான தரவுகளைத் தேடிப் பார்த்தால் இந்த அளவு மிகவும் அதிகம் என்பதை அறியலாம். உண்மையில் தண்ணீரின் அருமையை பற்றி சொல்ல எழுதப்பட்ட வசனம்தான் அது. ஆனால், அதை ஓரளவு உறுதிப்படுத்துவிட்டு எழுதலாம்தானே. இதேபோல் பல வசனங்களில் சொல்லப்படும் தகவல்கள் பலவும் வாட்ஸ்அப் வைரல் ரகங்களாகவே உள்ளன.

சரி, இதுபோன்ற சில தகவல் பிழைகளைக் கூட கண்டுகொள்ள வேண்டாம். ஆனால், படத்தின் முக்கியமான வில்லன், "இந்த உலகத்தையே 13 குடும்பங்கள்தான் ஆளுது... அவங்க நினைச்சா என்ன வேணும்னாலும் பண்ணமுடியும்" என்று கூறுகிறார். தமிழில் சில யூடியூபர்களின் விளக்கவுரை வீடியோக்கள் பலவும் அபத்தங்களாக இருப்பதைக் கண்டிருப்போம். இல்லுமினாட்டிகள் என்கிற நிரூபிக்கப்படாத, ஆதாரங்கள் இல்லாத, பல்வேறு கட்டுக்கதைகளை உண்மைத்தன்மை கொண்டது போன்று அழுத்தம் திருத்தமாகச் சொல்வார்கள். அந்தத் தாக்கமும் 'பூமி'யில் உணர முடிந்தது.

படத்தில் ஜெயம் ரவி, விவசாயிகள், ஜெயம் ரவி நண்பர்கள் தவிர மற்ற யாவருமே கெட்டவர்கள்தான். அரசியல்வாதிகள் கெட்டவர்கள். பெண்களை போகப்பொருளாக நினைக்கும், தனது அலுவலகத்திலேயே இளம் பெண்களை அமரவைத்து, அவர்களுடன் கூத்தடிக்கும் கலெக்டர்; தன்னிடம் மனு கொடுக்க வருபவர்களை தரக்குறைவாக பேசும் வட்டாட்சியர்; இதுபோக நாயகனை அடிப்பதற்கென்றே இருக்கும் காவல்துறையினர்... இப்படி எல்லாருமே கெட்டவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, மொத்த கார்ப்பரேட் நிறுவனங்களும் கெட்டவர்கள். அடேயப்பா!

லாஜிக் என்பதை விடுங்கள். ஆனால், குறைந்தபட்ச யோசனைகூட இல்லாமல் எப்படி திரைக்கதை எழுதி, காட்சிகளை எடுத்தார்கள் என்று வியப்பு மேலிடுகிறது. தீயில் பொசுங்கி உயிருக்கு போராடியவாறு ஆக்சிஜன் மாஸ்க்கை அணிந்துகொண்டு ஆம்புலன்ஸில் பயணம் செய்யும் தம்பி ராமையாவின் மாஸ்க்கை கழட்டிவிட்டு, மணிக்கணக்காக வசனம் பேசவைத்தால், அவர் இறந்துதானே போவார்? அப்புறம் எப்படி அவர் இறந்ததற்கு வருத்தம் ஏற்படும்? சிரிப்புதானே வரும்? இப்படித்தான் படம் முழுக்க இருக்கிறது காட்சிகள் நீள்கின்றன.

வலிந்து திணிக்கப்பட்ட சோகங்களும், வாட்ஸ்அப்பை நம்பிய வசனங்களும் சேர்ந்து படம் பார்க்கும் அனுபவத்தையே ஒரு சித்ரவதையாக மாற்றி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

உண்மையில் விவசாயம் காக்கப்படவேண்டும் என்பதும், விவசாயிகளின் தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதும் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒன்றே. அதில் மாற்றுக்கருத்தே இல்லை. இதுபோன்ற சமூக அக்கறை கொண்ட சப்ஜெக்ட்டை கையிலெடுத்தது மெச்சத்தக்கது. ஆனால், இதைப் திரைப்படமாக்கும்போது, பார்வையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். உண்மையான அக்கறை பொங்கிப் பெருகும்படி அந்தப் படைப்பு இருக்கவேண்டும். அதுதானே நாம் அதற்கு செய்யும் மரியாதை. ஆனால், இங்கோ எல்லாம் தலைகீழ். எல்லாவற்றையும் ரொமான்டிசைஸ் செய்வதன் மூலம் உண்மையான பிரச்னைகள் பூசி மெழுகப்பட்டு, நம் எதிரி எங்கோ அமர்ந்திருக்கும் எவனோ என்பதைப்போல சித்தரித்தால், அது சமூக அக்கறையான படைப்புக்கே செய்யும் துரோகம் என்றே கருதலாம்.

இந்தப் படம் முழுக்கவே அப்படித்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உண்மைக்கு அருகில் இருக்கவேண்டிய இந்த மாதிரி கதைகள், வெறும் நாயக பிம்பத்திற்காக கட்டமைக்கப்படும் ஃபேன்டஸி கதையைப்போலவே அணுகப்பட்டிருக்கிறது. படத்தின் பின்னால் இருக்கும் எவரின் உழைப்பும் கண்ணுக்குத் தெரியாத வண்ணம் படத்தின் அபத்தங்கள் மட்டுமே முன்னே நிற்கிறது. அதுவே, இந்தப் படம் இப்படியான விமர்சனப் பார்வையைப் பெறுவதற்கான முழுமுதற் காரணம். திரைமொழியே சரிவர இல்லாத ஒரு படத்துக்கு நடிகர்கள் தொடங்கி தொழில்நுட்பப் பிரிவுகள் வரையில் பகுத்துப் பார்த்து, எப்படி இருக்கிறது என்று விவரித்து சொல்ல முடியாத அளவுக்கு நம்மை பாடாய் படுத்திவிடுகிறது இந்த 'பூமி'.

- பால கணேசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com