“தரங்கெட்ட படங்களால் தமிழகம் தரமிழந்து கிடக்கிறது” பாரதிராஜா வேதனை
அண்மைக்காலமாக சில தரங்கெட்ட திரைப்படங்களால் தமிழகம் தரமிழந்து கிடக்கிறது என்று இயக்குநர் பாரதிராஜா வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலக்கியம், இதிகாசம், மனித வாழ்க்கையை கொண்டாடிய படங்கள் இன்று சதையை மட்டும் கொண்டாடுகின்றன. சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய திரைப்படங்கள் இன்று இரட்டை அர்த்த வசனங்களால், மலிந்து போய்க் கிடக்கின்றன. கொண்டாட வேண்டிய படங்கள் கொள்கையற்றுக் கிடக்கின்றன. இலைமறை காயாகக் சொல்லப்பட்ட விஷயங்களை இன்று, இலை போட்டுப் பரிமாறுகிறார்கள். தாழ்ந்த உருவாக்கங்களால் தலை குனிகிறது நம் திரப்படத்துறை” என்று கூறியுள்ளார்.
மேலும், “தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் துணை போவதால்தான், ஆபாசமான திரைப்படங்களுக்கும், தலைப்புகளுக்கும் அனுமதி கிடைக்கின்றன. தமிழர்களின் பண்பாடு தெரியாதவர்கள் பதவியில் இருந்தால் இப்படிதான் நடக்கும், இதற்கு மேலும் நடக்கும். இதற்கு முடிவு கட்ட நாள் குறிக்க வேண்டும்” என்றும் பாரதிராஜா சாடியுள்ளார்.
தமிழக மக்கள் தரங்கெட்டுப் படைக்கும் படைப்புகளைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பாரதிராஜா, சமீபகாலமாக மத்திய அரசின் சென்சார் போர்டு ஆபாச படங்களுக்கு அனுமதி அளிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகியுள்ள ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தையொட்டியே பாரதிராஜா இந்த விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.