“என்னுடைய சட்டையை வலுக்கட்டாயமாக வாங்கி’- உலகம்மை ப்ரஸ் மீட்டில் பாரதிராஜா, இளையராஜா கலகல!

“என்னுடைய சட்டையை வலுக்கட்டாயமாக வாங்கி’- உலகம்மை ப்ரஸ் மீட்டில் பாரதிராஜா, இளையராஜா கலகல!

“என்னுடைய சட்டையை வலுக்கட்டாயமாக வாங்கி’- உலகம்மை ப்ரஸ் மீட்டில் பாரதிராஜா, இளையராஜா கலகல!
Published on

விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள 'உலகம்மை ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை கோடம்பாக்கத்தில், இளையராஜாவின் இசைக் கூடத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் சமுத்திரம் எழுதிய 'ஒரு கோட்டுக்கு வெளியே' என்ற நாவலைத் தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா, ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கவிஞர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜாவும், பாரதிராஜாவும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் மேடையில் வெகுவாகப் பாராட்டியும், பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து கேலி செய்தும் பேசினர்.

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “இளையராஜாவை பற்றி பேசாமல் நிகழ்ச்சி நிறைவு பெறாது. சூரியன் போன்றவன் இளையராஜா, எவ்வளவுதான் அவனை பற்றி பேசுவது. இதுவரை எனது படங்கள் பேசப்பட, நான் எடுத்த காட்சியை விட, அவன் அமைத்த பின்னணி இசைதான் காரணம். இளையராஜாவின் 5 விரல்களிலும் 5 சரஸ்வதி இருக்கும்.

நாங்கள் நாடகங்களில் நடித்தபோது என்னை இளையராஜா வசனம் பேசவே விடமாட்டான். என்னை எவ்வளவு வாரிவிட வேண்டுமோ, அவ்வளவு வாரி விடுவான். இன்றுவரை வாரி விடுகிறான். ரொமான்டிக் தெரிந்தவன்தான். நல்ல இயக்குநர். எந்த வரியை யார் எழுதினாலும், இளையராஜா இசை அமைத்தால் அதற்கு உயிர் கிடைக்கும். நான் பாடல் பாடினாலே இளையராஜா எழுந்து ஓடிடுவான். எனக்கு எப்போதும் வயது 21-ஐ தாண்டாது. அதனால்தான் இப்படி ரொமாண்டிக்காக நிற்கிறேன்" என்று பேசினார்.

பாரதிராஜா பேசும்போது, இடை இடையே பேசிய இளையராஜா, “அல்லி நகரத்தில் நாடகம் நடிக்கும்போது, பாரதிராஜா மேடையில் நடித்துக் கொண்டிருப்பார். நான் கீழே அமர்ந்து ஆர்மோனியம் இசைப்பேன். அப்போது என்னுடைய சட்டையை வலுக்கட்டாயமாக வாங்கி, பாரதிராஜா போட்டுக் கொள்வார். மறுநாள் அந்த சட்டையை சாலையில் போட்டு சென்றால், அதை பாரதிராஜாவின் சட்டை என்று நினைத்து விடுவார்களோ என்று எனக்கு பயமாக இருக்கும்.

சினிமாவில் இயக்குநர், உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என பலரையும் கொண்டுவந்தவர் பாரதிராஜா. இன்று சினிமாவில் இருக்கும் எல்லோரும் பாரதிராஜாவின் ஆட்கள்தான். நான் இந்தப் படம் பண்ணி கொடுக்க ஒப்புக்கொண்டதே படக்குழுவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான்" என்று கூறினார்.

ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “30 ஆண்டுகளாக இளையராஜாவை பார்த்து பயந்துதான் நின்றோம். இப்போதுதான் அவருடன் சிரிக்கிறோம். 'கேப்டன் பிரபாகரன்' படப்பிடிப்பு ஆண்டிப்பட்டியில் நடந்தது. அப்போது ஒரு பாடல் இசை சரியாக இல்லை என்று இளையராஜாவிடம் தயக்கத்துடன் போனில் கூறினேன். அடுத்த நாள் காலைக்குள் இசையமைத்து, மதியம் ரயில் மூலம் எங்களுக்கு இசைப் பதிவை அனுப்பி வைத்தார்.

ஆட்டமா..தேரோட்டமா..பாடல்தான் அது. செம்பருத்தி படத்தின் 9 பாடலுக்குமான இசையையும், 45 நிமிடங்களில் முடித்து கொடுத்தார் இளையராஜா. பலரை இயக்குநர், தயாரிப்பாளர் ஆக்கியது இளையராஜா. 'புலன் விசாரணை' படத்தில் சில மாறுதல்களை செய்யுமாறு, என்னிடம் இளையராஜா கூறினார். படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெற்ற சண்டைக் காட்சி, பெரியளவில் பேசப்பட, இளையராஜாதான் காரணம். Silence is also a music என்று கூறுவார் இளையராஜா” என்று தெரிவித்தார்.

கவிஞர் முத்துலிங்கம் பேசுகையில், “நான் முதல் பாட்டு எழுதியது ‘பொன்னுக்கு தங்க மனசு’ படத்தில்தான். கடந்த 1973-ம் ஆண்டு படம் வெளியானது. உதவியாளராக இருந்த இளையராஜா அமைத்த மெட்டில்தான் அந்த படத்தில் எனது முதல் பாடல் உருவானது. இளையராஜா இசையில் நான் எழுதிய முதல் பாடல் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மாஞ்சோலைக் கிளிதானோ பாடல். 1978-79-ல் தமிழக அரசின் சிறந்த பாடலாக அது தேர்வானது.

இதுவரை 1700 பாடல்கள் எழுதியுள்ளேன். இந்தியாவிலேயே இசைப் புலமையுடன், இலக்கிய, இலக்கணப் புலமையும் உள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜாதான். வெளியில் இருந்து பார்க்க எப்படி தெரிந்தாலும், நெருங்கிப் பழகினால் குழந்தை போன்றவர் இளையராஜா" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com