'அசுரன்' படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது!

'அசுரன்' படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது!
'அசுரன்' படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' படத்துக்கு, சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், சிறந்த தமிழ்ப் படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் ’அசுரன்’ திரைப்படம் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

விமர்சன ரிதியில் மட்டுமின்றி வர்த்தக ரீதியிலும் மிகுந்த கவனத்துக்குரிய படமான 'அசுரன்', பூமணி எழுதிய 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம். சாதி ஆதிக்கத்தின் அவலச் சூழலையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் இப்படம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

'வெக்கை' நாவலை படத்தின் முதல் பகுதியில் கதையின் டேக் ஆஃப்-க்காக பயன்படுத்தி இருக்கும் வெற்றிமாறன், உள்ளபடியே அந்த நாவலை அடைப்படையாக மட்டுமே எடுத்துக்கொண்டு இரண்டாம் பகுதிக்கு தனது பாணியில் திரைக்கதை எழுதி அசத்தி இருப்பார். பீரியட் ஃபிலிமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அக்காலத்தில் இருந்த சாதியக் கொடுமைகள், உயர்ச் சாதியினரின் அராஜகப் போக்கு என எல்லாவற்றையும் துணிச்சலாக பதிவு செய்திருப்பார் வெற்றிமாறன்.

ஊருக்குள் செருப்பு அணிந்து சென்ற தனுசின் அக்கா மகள் அவமானப்பட, அங்கிருந்து கிளம்பிய பகையொன்றின் கிளைக்கதையை இரண்டாம் பாதியில் உருவாக்கி, அதனை 'வெக்கை'யின் மூலக்கதையுடன் மிகச்சரியாக பொருத்தி இருப்பார் வெற்றிமாறன்.

இறுதிக்காட்சியில் "நம்மகிட்ட இருந்து நிலத்தை பறிக்கலாம், காச திருடலாம், ஆனா படிப்ப யாரும் திருட முடியாது நல்லா படிக்கணும்" என தனுஷ் கதாபாத்திரம் பேசும் வசனம் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளியது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com