ஆல்ப்ஸ் மலையிலோர் அன்புச் சித்திரம். - பெல் அண்ட் செபாஸ்டியன் (2013)

ஆல்ப்ஸ் மலையிலோர் அன்புச் சித்திரம். - பெல் அண்ட் செபாஸ்டியன் (2013)
ஆல்ப்ஸ் மலையிலோர் அன்புச் சித்திரம். - பெல் அண்ட் செபாஸ்டியன் (2013)

நாய், பூனை, பறவைகள் என மனிதர்கள் அல்லாத மற்றவைகள் மீது குழந்தைகள் நட்பு ஏற்படுத்திக் கொள்ள முயல்வதை கவனித்திருக்கலாம். பல்லி, எறும்பு, கரப்பான்பூச்சி என அவற்றை துரத்திப் பிடிப்பதில், அவர்களுக்கு இருக்கும் கொண்டாட்டமே தனி. குழந்தைகளைப் பொருத்தமட்டில் இவைகள் எல்லாம் அவர்களின் விளையாட்டுப் பொருட்கள் உயிருள்ள விளையாட்டுப் பொருட்கள். அதனால் தான் ஒரு பலூனின் இழப்பை தாங்க முடியாமல் அழுகிறார்கள். வீட்டில் நாயிடமும், பூனையிடம் உணவை பகிர்ந்து கொள்கிறார்கள். பார்பி டாலிடம் கோபித்துக் கொள்கிறார்கள். ஐஸ்கிரீமுக்குள் முகம் புதைக்கிறார்கள். குழந்தைகளை சக உயிர்களிடத்தில் நேசம் கொண்டாடும் மனிதர்களாக உருவாக்குவதில் தொடர்ந்து நாம் தவறவிடும் எதையோ அவர்கள் சரி செய்து கொண்டே வருகிறார்கள்.

2013-ஆண்டு வெளியான ”பெல் அண்ட் செபாஸ்டியன்” என்ற சினிமா குழந்தைகள் காட்டும் நேசத்தின் முன் உங்களது யுத்தம், வன்முறை, பேராசை எல்லாவற்றையும் அர்த்தமற்ற ஒன்றாக நீர்த்துப் போகச் செய்கிறது.

பிரான்ஸில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் 1943-ல் நடைபெறும் இக்கதையின் நாயகன் ஏழு வயதான செபாஸ்டியன். பெற்றோரை இழந்த அவன் சீசர் எனும் முதியவரிடம் வளர்கிறான். சீசர் அவரது மகள் ஏஞ்ஜலினா மற்றும் செபாஸ்டியன் மூவரும் ஆல்ப்ஸ் மலையில் ஜெர்மன் படைகளின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் மலைக் கிராமத்தில் வசிக்கிறார்கள்.  

சீசருக்கு மலைவனத்தில் ஆடு மேய்ப்பது மற்றும் பிரான்ஸின் மலைப்பகுதி வழியே சுவிட்சர்லாந்து தப்பிச் செல்ல முயலும் யூதர்களுக்கு உதவி செய்வதும் தான் வேலை. சிறுவன் செபாஸ்டியன் தூரத்தில் இருக்கும் மலைக்கு பின்புறத்தில் அமெரிக்கா உள்ளது என்றும் அங்கு தான் தனது தாய் வசிக்கிறாள் என்றும் அவளை கிறுஸ்துமஸ் நாளில் காணப் போவதாகவும் நம்பிக் கொண்டிருக்கிறான்.

அடிக்கடி கையில் துப்பாகியுடன் மலையில் சுற்றிவரும் சீசரும் செபஸ்டியனும் தாய் ஆடு ஒன்று சுடப்பட்டு இறந்துவிட்ட நிலையில் மலை முகடில் தவிக்கும் குட்டி ஆட்டை பார்க்கிறார்கள். செபாஸ்டியன் ஒரு கயிற்றில் இறங்கி குட்டியை மீட்டு அவர்களின் மந்தையில் சேர்க்கிறான். இப்படி அவனுக்கு மலை, மலைவனம் விலங்குகள் என எல்லாம் பரிட்சயமாகின்றன.

ஒரு நாள் பெல் எனும் பெரிய வெள்ளை நாயை சந்திக்கும் அவன் அந்த நாய்க்கு நண்பனாகிறான். அந்த நாயை நதியில் குளிப்பாட்டுகிறான். இருவரும் நதியில் நீந்தி மகிழ்கிறார்கள்.

சீசர் அவ்வப்போது வனவிலங்குகளை வேட்டையாட கண்ணிகள் அமைப்பதுண்டு அது எப்படி வேலை செய்யும் என செபஸ்டியனிடம் விளக்குவதும் உண்டு. ஆனால் சிறுவனுக்கு கண்ணி வைத்து ஆடுகள் வேட்டையாடப்படுவதில் உடன் பாடில்லை. தன்னை வளர்க்கும் தாத்தாவிற்கு தெரியாமல் பெரிய நாய் பெல்லுடன் சேர்ந்து அந்த கண்ணிகளில் ஆடுகள் சிக்கிவிடாமல் காப்பாற்றுகிறான் அவன்.

ஜெர்மனிய படையில் உள்ள சிலர் அந்த மலைப்பகுதியில் ரோந்து செல்வதுண்டு அவர்கள் வன விலங்குகளை வேட்டையாடியும் வந்தனர். ஒரு முறை விலங்கு வேட்டையாட முயன்ற ஒருவனை செபஸ்டியன் கல்லால் தாக்க முயன்ற போது அவர்களில் ஒருவன் சிறுவனை பதிலுக்கு தாக்குகிறான். கோபத்தில் பெரிய நாய் பெல் அந்த ஜெர்மன் காரனின் மேல் பாய்ந்து கைகளை கடித்து விடுகிறது. வழக்கு அப்பகுதி இராணுவ அதிகாரியிடம் கொண்டு செல்லப்படுகிறது. மறுநாள் காலைக்குள் அந்த நாயை கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என்ற அவரது கட்டளையினை ஏற்று ஒரு சிறு குழு மலையில் பெரிய நாய் பெல்லை தேடி சுட்டுவிடுகிறது. காயமடைந்த பெல்லுக்கு உள்ளூர் மருத்துவர் உதவியுடன் செபஸ்டியன் ரகசியமாக வைத்தியம் செய்து காப்பாற்றுகிறான்.

ஒரு யூத குடும்பம் மலைவழியே ரகசியமாக சுவிட்சர்லாந்து செல்வதற்காக சீசரின் வீட்டில் தங்கியிருக்கிறது. அந்த குடும்பத்தில் சிறுமி ஒருத்தி இருக்கிறாள். அச்சிறுமியும் சிறுவன் செபாஸ்டியனும் நண்பர்கள் ஆகின்றனர். அவள் ”மலைக்கு அந்த பக்கம் இருப்பது அமெரிக்கா அல்ல சுவிட்சர்லாந்து” என செபஸ்டியனுக்கு சொல்கிறாள்.

அதுவரை தான் தனது தாயிடம் போய் சேரப்போவதாக நம்பியிருந்த அவனுக்கு அது ஏமாற்றத்தை தருகிறது. தனது தாய் தான் பிறந்ததும் இறந்துவிட்டது பற்றி சீசர் மூலம் அறியப்பெறும் போது அவன் கண்களில் ஆல்ப்ஸ் மலை வெந்நீராய் உருகியது.

யூத குடும்பம் பத்திரமாக எல்லையை கடக்க செபஸ்டியனும் அவனது செல்லநாய் பெல்லும் வழித் துணைக்கு வருகிறார்கள். பனிப்புயல் கடந்து பாதுகாப்பான பகுதிக்குள் நுழைந்ததும் அவர்கள் செபஸ்டியனிடம் விடைபெற வேண்டியிருக்கிறது கண்ணீருடன் விடைபெறும் அவர்கள் செபஸ்டியன் பத்திரமாக வீடு திரும்ப பெரியநாய் பெல் துணையாக இருக்கிறது என்ற நம்பிக்கையில் பிரிகிறார்கள். நாயும் சிறுவனும் பெரும் பனி வனத்தில் தனியே கூடு நோக்கி நடந்து போவதாக நிறைவுபெறுகிறது இந்த பனிச் சித்திரம்.

சிறுவனும் நாயும் கட்டிப்பிடித்து விளையாடும் காட்சியில் ’அர்மண்ட் ஆமர்’ன் இசை ஆல்ப்ஸ் மலையின் ஈரக்காற்றில் நறுமணத்தை பரப்புகிறது. பிரெஞ்சு நாவலாசிரியர் ’சிசில் அப்ரி’ எழுதிய ‘பெல் அண்ட் செபஸ்டியன்’ என்ற நாவலைத் தழுவி இயக்குநர் ’நிக்கோலஸ்’ இப்படத்தை இயக்கினார். 2013-ஆம் வருடம் வெளியான இப்படம் 80-களில் ஜப்பானிய டிவியில் கார்ட்டூன் தொடராகவும் வந்தது. தான் சிறுவயதில் பார்த்த அந்த கார்ட்டூன் தொடர் தான் தன்னை இப்படத்தை இயக்கத் தூண்டியது என இயக்குனர் ‘நிகோலஸ்’ ஒரு பேட்டியில் கூறினார். 2015’ஆம் ஆண்டு மின்னிபோலீஸ் செயிண்ட் பவுல் சர்வதேச திரைப்படவிழா, 2014’ஆம் ஆண்டு செட்டில் சர்வதேச திரைப்பட விழா  மற்றும் அதே ஆண்டு நடந்த டால்லின் ப்ளாக் நைட்ஸ் பிலிம் பெஸ்டிவல் உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் இந்த திரைப்படம் விருது பெற்றது. இத் திரைப்படம் குழந்தைகளுக்கும் சக உயிர்களுக்குமான உறவின் உன்னதம் பற்றி மட்டுமல்ல உலக எல்லைக்கு வெளியே தூக்கி எறியப்பட வேண்டிய அவசியமற்ற ஆயுதங்களின் அர்த்தமற்ற சத்தத்தையும் இதமான ஈர மொழியில் பேசுகிறது.

சிறுவயதில் இதனை நாவலாக வாசித்தவர்களின் குழந்தைகள் நேற்று அதை கார்ட்டூன் தொடராக பார்த்து ரசித்தனர். அதன்பின் நவீன தொழில் நுட்பங்களுடன் சினிமாவாக வடிவம் பெற்றுள்ள இப்படத்தை நாம் இன்று பார்த்து ரசிக்கிறோம்.

அன்பை பேசும் எந்த ஒரு படைப்பும் தலைமுறைகள் தாண்டி பயணிக்கும் என்பதற்கு இப்படம் ஒரு சாட்சி. இப்போது சிறுவன் செபாஸ்டியன் தன் செல்லநாய் பெல்லின் தோள்களைத் தழுவியபடி ஆல்ப்ஸ் மலையின் பனி நிலத்தில் நடந்து போய்க் கொண்டிருக்கிறான். அன்புக்கு ஏங்கும் அந்த பிஞ்சு கால்கள் எல்லை சேரட்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com