பெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..!
மனதில் நினைத்ததை பேசும் தைரியத்தை கொடுத்தவர் பெரியார் தான் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா திராவிடர் திருநாளாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்ணிமை, இயக்குநர் மீரா கதிரவன் ஆகியோருக்கு 2019-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து சிறந்த படைப்புகளுக்காக பெரியார் குத்துப் பாடல் தயாரித்த நடிகர் சிம்பு, பாடலாசிரியர் மதன் கார்க்கி குழுவினர், சாகித்ய அகாடமி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், மொழிப்பெயர்ப்பாளர் சுப்பாராவ் ஆகியோருக்கும் பெரியார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிம்பு, அனைவரும் உணர்வால் ஒன்றாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, பெரியார் குத்து என்ற ஆல்பத்தை சமீபத்தில் நடிகர் சிம்பு உருவாக்கியிருக்கிறார். பாடலாசிரியர் மதன் கார்கி வரிகளில் இந்த பாடல் தயாராகியிருந்தது. நாட்டின் பல்வேறு விஷயங்கள் பற்றி இந்த பாடலில் வரிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.