ரசிகையின் ஒரே ஒரு கடிதம் தான்! ’எஜமான்’ படத்தின் வசூலை புரட்டிப் போட்ட புரமோஷன் ஐடியா!

ரசிகையின் ஒரே ஒரு கடிதம் தான்! ’எஜமான்’ படத்தின் வசூலை புரட்டிப் போட்ட புரமோஷன் ஐடியா!
ரசிகையின் ஒரே ஒரு கடிதம் தான்! ’எஜமான்’ படத்தின் வசூலை புரட்டிப் போட்ட புரமோஷன் ஐடியா!

30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘எஜமான்’ படம் குறித்த நினைவுகளை, பெண் ரசிகை ஒருவர் எழுதிய கடிதத்துடன், ஏ.வி.எம். நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ஏ.வி.எம். தயாரிப்பில் வெற்றிப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில், 1993ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’எஜமான்’. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏ.வி.எம். தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். மேலும் நெப்போலியன், நம்பியார், மனோரமா, ஐஸ்வர்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில், ரேக்ளா பந்தயத்தில் நெப்போலியனுடன் போட்டிபோட்டு வென்று மீனாவை ரஜினிகாந்த் திருமணம் செய்துகொள்வார்.

அத்துடன், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த வானவராயன் (ரஜினி), வைத்தீஸ்வரி (மீனா) கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதைவிட்டு அகலாதாவை. காரணம், அந்த கதாபாத்திரங்கள், ’வாழ்ந்தால் இப்படி ஒரு கணவன், மனைவியாகத்தான் வாழ் வேண்டும்’ என்ற எண்ணத்தை மக்கள் மனதில் உருவாக்கி இருந்தது.

புரமோஷனுக்கு புதிய ஐடியாவை யோசித்த படக்குழு!

’எஜமான்’ படம் 1993ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி ரிலீஸானது. இதைத் தொடர்ந்து இப்படம் குறித்த விமர்சனங்களை, ரசிகர்கள் கடிதங்கள் மூலம் அனுப்பி வைக்குமாறு ஏ.வி.எம் சரவணன் கேட்டிருந்தார். ரசிர்களும் எண்ணற்ற கடிதங்களை அனுப்பிவைத்தனர். ’எஜமான்’ படம் வெளியாகி 30 ஆண்டுகளைக் கடந்திருக்கும் நிலையில், அப்படம் குறித்த நினைவுகளை, பெண் ரசிகை ஒருவர் எழுதிய கடிதத்துடன், ஏ.வி.எம். நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏவிஎம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ”80-களில் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள் என்பது மிகவும் அரிதான ஒன்று. அதனால், சரவணன் ஒரு முடிவு செய்தார். ’எஜமான்’ படம் குறித்து மக்களின் விமர்சனங்களை தபால் மூலம் அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். ஏராளமான கடிதங்கள் மக்களிடம் இருந்து வந்தன. அதில், இளம் பெண் ஒருவர் ’எஜமான்’ படம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகக் கூறி கடிதம் எழுதி இருந்தார்.

வானவராயன் போல் ஒரு கிடைத்தான் - ரசிகையின் அற்புதமான கடிதம்

அந்தக் கடிதத்தில். ”வானவராயன் போன்ற இணை கிடைத்தால் உடனடியாக திருமணம் செய்துகொள்வேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். 

உடனே அந்தப் பெண்ணின் கடிதத்தை புரமோஷனுக்காக பயன்படுத்த படக்குழு நினைத்தது. ஆனால், அதற்கு கடிதம் அனுப்பிய பெண்ணின் அனுமதி வேண்டியிருந்தது. பின்னர், அந்தப் பெண்ணின் ஊருக்கே சென்று தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், தனது தந்தை என்ன நினைப்பாரோ, என பயந்து தொடக்கத்தில் அந்தப் பெண் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இதில் நடந்த ஆச்சர்யம் என்னவென்றால், அந்தப் பெண்ணின் தந்தை அந்தக் கடிதத்தை பயன்படுத்த ஒப்புக் கொண்டதோடு, அவரது புகைப்படத்தையும் கொடுத்தார்.

அந்தக் கடிதத்தை பயன்படுத்தி படக்குழு மேற்கொண்ட புரமோஷனுக்கு கைமேல் பலன் கிடைத்தது. அதன் பிறகு ஆண்களும் தாங்கள் எழுதிய கடிதத்தில், ”வைத்தீஸ்வரி போன்ற பெண் கிடைத்தால் உடனே திருமணம் செய்துகொள்வேன்” என்று குறிப்பிட்டு எழுதினார்கள். இந்த கடிதங்களின் தாக்கம் எஜமான் படத்தை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கவைத்தது. படத்திற்கு ஜோடி ஜோடியாக கூட்டம் அலைமோதியது.
இதுதான் உண்மையான ரசிகர்களின் விமர்சனங்களின் பவர்.” என்று குறிப்பிட்டு இருந்தார். 

விஜய்காந்துக்கு ஒரு சின்ன கவுண்டர்.. ரஜினிக்கு ஒரு எஜமான்!

விஜயகாந்திற்கு எப்படி சின்னக் கவுண்டர் படமோ அதேபோல் ரஜினிக்கு எஜமான் படம் பெரிய அளவில் கிராமத்து பின்னணியில் வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்களும் மிக முக்கியமான கரணம். ’ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே’ இன்றளவும் பலரது ஃபேவரட் ஹிட் பாடலாக உள்ளது. அதேபோல், நிலவே முகம் காட்டு பாடல் சோகத்தின் கீதமாக இருந்து வருகிறது. 

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com