பட விளம்பரத்துக்காக இப்படி செய்யலாமா? ’பாபநாசம்’ நடிகை மீது புகார்!
சினிமா படத்தின் புரமோஷனுக்காக, நடிகை ஆஷா சரத் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகை ஆஷா சரத். இவர் தமிழில், கமல் நடித்த ’பாபநாசம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந் தார். கமலின், ‘தூங்காவனம்’ படத்திலும் நடித்திருந்தார். இவர் இப்போது ’எவிடே’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகிறது.
இதையொட்டி, தனது பேஸ்புக் பக்கத்தில் இவர், வீடியோ ஒன்றை நேற்று முன் தினம் வெளியிட்டார். அதில் மேக்கப் இல்லாமல் கலங்கிய முகத்துடன் ஆஷா சரத், தனது கணவரை காணவில்லை. அவரை கண்டுபிடித்தால் கட்டப்பனை போலீசில் தெரிவிக்க வேண்டும் என்று சோகமாகக் குறிப்பிட்டிருந்தார். இதை உண்மை என்று பலரும் நம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஷேர் செய்தனர். இது படத்துக்கான விளம்பரம் என்பது பின்னர் தெரிய வந்ததும் ஏமாற்ற மடைந்தனர். இதையடுத்து சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. நடிகை ஆஷா சரத்தை பலர் கடுமையாகச் சாடினர்.
இந்நிலையில், இதுகுறித்து ஸ்ரீஜித் பெருமனா என்ற வழக்கறிஞர் இடுக்கி மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் புகார் கொடுத்தார். அதில், ‘‘நடிகை ஆஷா சரத் வெளியிட்டுள்ள வீடியோ தவறான முன்னுதாரணமாகும். பார்ப்பதற்கு சாதாரண விஷயமாக இருந்தாலும், கடும் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என கூறியுள்ளார்.