“ஷாருக்கானுக்கு ஆதரவாக இருக்கிறோம்” - ட்விட்டரில் குவியும் ஆதரவு
ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான், போதை மருந்து வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். தற்போது ரசிகர்கள் #WeStandWithSRK என்ற ஹேஷ்டாக் மூலமாக ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக ட்விட்டரில் ஆதரவு பெருகி வருகிறது.
பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான், தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசால் (என்சிபி) மும்பை சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது. விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், ஷாருக்கின் ரசிகர்கள் ட்விட்டரில் #WeStandWithSRK , #SRKPRIDEOFINDIA என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பிச்சைக்கார குழந்தையுடன் ஆர்யன் இனிமையாக பேசும் பழைய வீடியோவை சமூக வலைதளங்களில் வைரல் செய்து வரும் ரசிகர்கள், ஷாருக்கானின் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.