Hotstar-ல் வெளியாகிறது ஆர்யாவின் 'டெடி' திரைப்படம்!
ஆர்யாவின் 'டெடி' திரைப்படம் ஓ.டி.டி. தளமான Hotstar-ல் வெளியாகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். அந்த வகையில் 'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்' ’சூரரைப் போற்று' முதலான படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகின.
ஆனால் தற்போது 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் பெரிய பட்ஜெட் அளவிலான படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகாமல் நாட்களை தள்ளிப்போட்டுள்ளது. இதில் விதிவிலக்காக சூரரைப்போற்று, அந்தகாரம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டன.
இதற்கு முன்பு ஓடிடியில் வெளியாகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெறவில்லை. ஆனால் 'சூரரைப்போற்று', 'அந்தகாரம்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தியேட்டர்கள் இப்படங்களை மிஸ் செய்துவிட்டன என கூறப்பட்டது.
இந்நிலையில், சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள 'டெடி' திரைப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட தயாரிப்பாளர் குழு முடிவு செய்துள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
காமெடி கலந்த திகில் படமாக உருவாகி உள்ள இதில், சதீஷ், கருணாகரன், சாக்ஷி அகர்வால், பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஓடிடி தளமான Hotstar-ல் வெளியாக உள்ளது.