பா. ரஞ்சித் உடன் குத்துச்சண்டை... புது அட்டேட் கொடுத்த ஆர்யா!
இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘சல்பேட்டா பரம்பரை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் கொடுத்திருக்கிறார், நடிகர் ஆர்யா.
இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பா. ரஞ்சித் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் ‘மெட்ராஸ்’ ரஜினியுடன் ‘கபாலி, காலாவை இயக்கி தமிழின் முன்னணி இயக்குநரானார்.
காலாவுக்குப் பிறகு, பீகார், ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களின் உரிமைகளை ஆங்கிலேயர்களிடமிருந்தும் உள்ளூர் நில உடமையாளர்களிடமிருந்தும் மீட்டுத்தர போராடிய பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க அறிவிப்பும் வெளியாகி, பின்பு இடையில் நின்று போனது.
இந்நிலையில், ஆர்யா, கலையரசன் நடிப்பில் ‘சல்பேட்டா பரம்பரை’ படத்தை பா.ரஞ்சித் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. குத்துச்சண்டையை மையப்படுத்திய இக்கதையில், ஆர்யாவும் கலையரசனும் உடம்பை மெருக்கேற்றிய வீடியோக்களும் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குநர் ரஞ்சித், மற்றும் பாக்ஸிங் பயிற்சியாளர் முரளியுடன் பயிற்சியெடுக்கும் படத்தை வெளியிட்டு, “இந்த அற்புதமான படத்திற்குந் நன்றி ரஞ்சித் சார். இதைவிட சிறந்த விளையாட்டுப் படத்தை நான் கேட்டதில்லை. பாக்ஸிங் பயிற்சி கொடுத்த முரளி சார் நம் அனைவரை விடவும் வேகமாக இருந்தார்” என்றதோடு ’நீங்கள் இல்லாமல் இந்தப் படம் கற்பனை செய்ய முடியாததாக இருந்திருக்கும்’ என்று தயாரிப்பாளரையும் பாராட்டியுள்ளார்.