இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான ‘மாஃபியா’ படம் - அதிர்ச்சியில் படக்குழு
மாஃபியா படத்தின் ஹெச்.டி பிரிண்ட் முதல் நாளிலேயே சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் வருத்தத்தில் உள்ளனர்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மாஃபியா’ படம் இன்று வெளியாகியுள்ளது. தொடக்கத்தில் கமர்ஷியல் படங்களில் அதிகம் நடித்து வந்த அருண் விஜய், ஒரு கட்டத்தில் கதைத் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்தினார். கதைக்கும், நடிப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை ஒவ்வொன்றாக தேர்வு செய்து நடித்து வந்தார். நடிப்பிலும் தொடர்ச்சியாக தனி முத்திரை பதித்து வருகிறார். கடைசியாக அவருக்கு தமிழில் வெளியான ‘தடம்’ படம் அதற்கு ஒரு சான்று.
‘என்னை அறிந்தால்’, ‘குற்றம் 23’ , ‘செக்க சிவந்த வானம்’, ‘தடம்’ ஆகிய படங்களை தொடர்ந்து கார்த்திக் நரேனுடன் இணைந்து மாஃபியா படத்தில் நடித்துள்ளார். ‘துருவம் பதினாறு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்தவர் கார்த்திக் நரேன். அதனால், மாஃபியா படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இது படத்தின் முதல் பாகம்தான்.
இன்று வெளியாகியுள்ள ‘மாஃபியா’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்தப் படத்தில் சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (Narcotics Control Bureau)அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ளார். இரண்டாவது பாகத்தை பார்க்க தூண்டும் வகையில் படம் முடிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘மாஃபியா’ சேப்டர் 1 படத்தின் ஹெச்.டி பிரிண்ட் முதல் நாளிலேயே இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல் நாளிலேயே படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாவது, குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் தங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வருகின்றது. நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்படுகின்றன. இருப்பினும், இணையத்தில் முறைகேடாக படங்கள் வெளியாவது நின்றபாடில்லை.