பிகில் வசூல் சாதனை உண்மையா? - மோதிக் கொள்ளும் திரையரங்க உரிமையாளர்கள்
பிகில் வசூல் சாதனை உண்மையா? - மோதிக் கொள்ளும் திரையரங்க உரிமையாளர்கள்
விஜய் - அட்லீ கூட்டணியின் மூன்றாவது படமாக தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் பிகில். இப்படம் வெளியான அன்றைய தினத்தில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. வழக்கமாகவே விஜய் படத்தின் வசூல் விவரங்கள் என்பது தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாது அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும். காரணம் விஜயின் படங்கள் சமீப காலமாக தமிழ் சினிமாவின் முந்தைய சாதனைகளை முறியடித்து வருகின்றன. எனவே அந்த வரிசையில் பிகில் படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி இருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து படம் 200 கோடி வசூலித்தாக சொல்லப்பட்டது. இந்தப் பதிவு ஆதரவோடு சேர்த்து விமர்சனங்களையும் சேர்த்தே பெற்றது.
இதனைத் தொடர்ந்து வார இறுதி நாட்களை தவிர மற்ற நாட்களில் பிகில் படத்தின் டிக்கெட்டுகள் சரியாக விற்பனையாகாதால் டிக்கெட் புக் செய்தவர்களை வேறு திரையங்கத்திற்கு மாற்றினோம் என்று சென்னை தேவி பாரடைஸ் தியேட்டர் நிர்வாகம் வெளியிட்ட தகவலும் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று நெல்லையில் அமைந்துள்ள பிரபல திரையரங்கம் ஒன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டது. அதில் நெல்லையில் 2019 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூல் சாதனை செய்துள்ள படம் பிகில் என்று குறிப்பிட்டு இருந்தது.
இந்த டுவிட்டை விமர்சனம் செய்யும் வகையில் நெல்லையில் அமைந்துள்ள மற்றொரு திரையரங்கம் ஒரு குறிப்பட்ட இடத்தில் ஒரு படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது? வசூலில் எந்தத் தியேட்டர் முன்னிலையில் வகித்துள்ளது? என்பது உள்ளிட்ட விவரங்கள் படத்தின் விநியோகஸ்தருக்கு மட்டுமே தெரியும் என்றும் ஆகவே பிற திரையரங்களில் இருந்து வரும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள பிகில் வசூல் குறித்து பதிவிட்ட அந்த திரையரங்கம், ‘விநியோகஸ்தரே கடந்த மாதம் அசுரன் படம் வெளியானது. அந்த படத்திற்கு நீங்கள்தான் விநியோகஸ்தர். உங்களுக்கு தெரியும். நெல்லையில் அசுரன் படம் எங்கள் திரையரங்கில் அதிகம் வசூல் செய்தது என்று. பிகில் விஷயத்தில் படம் தொடர்பான அறிவிப்பை நாங்கள் வெளியிடும் முன்பே நெல்லையில் நான்கு திரையரங்குகளில் பிகில் படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டு பிகில் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது.
ஆனால் நாங்கள் ரசிகர்களுக்கான எந்தச் சிறப்பு காட்சியையும் திரையிடவில்லை. இதற்கும் கடைசி நேரத்தில்தான் நாங்கள் டிக்கெட் புக்கிங்கை தொடங்கினோம். இருந்தாலும் கிட்டதட்ட 27,000 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன’ என்று பதிலளித்துள்ளது.
இது மட்டுமல்லாமல் நாங்கள் எங்களது திரையரங்கில் பிகில் வசூல் செய்த விவரங்களை தாக்கல் செய்ய தயார் என்றும் இந்த சவாலுக்கு நீங்கள் தயாரா என்றும் சவால் விடுத்துள்ளது. மேலும் பிகில் படத்தின் விநியோகஸ்தராக நீங்கள் இல்லாத பட்சத்தில் எப்படி நாங்கள் பொய் சொல்லுகிறோம் என்று கூறுகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இது மட்டுமல்லாமல் திறமை, தகுதி உள்ளவர்கள் உயர வருவாருகள் என்றும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளது.