சினிமா
வாத்திக்கு எதிராக மாறும் நண்பன் பவானி - ‘மாஸ்டர்’ சீக்ரெட்ஸ்
வாத்திக்கு எதிராக மாறும் நண்பன் பவானி - ‘மாஸ்டர்’ சீக்ரெட்ஸ்
விஜய் சேதுபதிக்காக வெளியான ‘மாஸ்டர்’ பாடல் வரிகள் மூலம் இந்தப் படத்தின் கதைக் கரு என்ன? விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவில்லையா? என்பதற்கான விளக்கங்கள் கிடைத்துள்ளன.
நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இதனை ‘மாநகரம்’ மற்றும் 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவருடன் விஜய் முதன்முறையாக இணைந்துள்ளார். இந்த இயக்குநரின் இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதினால் விஜய்யின் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா அச்சம் பரவி வருவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளதால் ஒட்டு மொத்த திரை உலகமும் முடங்கிப் போய் கிடக்கின்றது.
ஆகவே அடுத்த மாதம் திட்டமிட்டபடி ‘மாஸ்டர்’ வெளியாகுமா என அவரது ரசிகர்கள் சந்தேகத்தில் உள்ளனர். இந்நிலையில் ‘மாஸ்டர்’ படம் குறித்து கடந்த சில நாட்கள் முன்பு ஒரு தகவல் கிடைத்தது. ஒட்டுமொத்த திரையுலகமே முடங்கிப் போய் இருக்கும் இந்த வேளையிலும் ‘மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் திட்டமிட்டவாறு விறுவிறுப்பாக நடந்து வருவது தெரியவந்தது. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், தனது ஒளிப்பதிவு சார்ந்த டிஐ தொழில்நுட்ப வேலைகளை (டிஜிட்டல் இண்டர்மிடியேட்) மும்முரமாகச் செய்து கொண்டுள்ளது தெரிந்தது.
இந்நிலையில், இந்தப் படத்தின் விஜய் சேதுபதி கதாபாத்திரம் தொடர்பாக சில விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, வில்லனாக நடித்து வருவதாகவே இதுவரை நம்பப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, விஜய் சேதுபதி ‘இந்தப் படத்தில் யாரும் ஹீரோவும் கிடையாது. வில்லனும் கிடையாது’ என ஒரு க்ளூவை கொடுத்திருந்தார். அதேபோல் விஜய் பேசும் போது, ‘இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஏன் சம்மதித்தார் என்றே தெரியவில்லை. இதை அவரிடமே கேட்டேன். அதற்கு அவர் உங்களை ரொம்ப பிடிக்கும்’ என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டுச் சென்றுவிட்டார் என்றார்.
இதனிடையே தான் கடந்த 1 ஆம் தேதி வெளியான விஜய் சேதுபதி குறித்து ஒரு பாடல் வெளியானது. அதை வைத்து கணிக்கும் போது இப்படத்தில் விஜய் சேதுபதியும் விஜய்யும் நண்பர்களாக நடித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த நண்பர்கள் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு மோதலாக மாறுவதாகவும் கூறப்படுகிறது. பாடல் வரிகளின் மூலம் விஜய் சேதுபதியின் கேரக்டர் பெயர், பவானி என்பதும் ‘அடிச்சது யாரு வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும்.. போதை தெளிஞ்சு பட்டை எடுக்க கிளம்பி வருவான் டா.. உன்னை தொங்க விட்டு தோலை உரிப்பேன்.. சொல்லி வெச்சவன் வாத்தி’ என்ற வரிகள் மூலம் இந்த இருவருக்கும் இடையே பகை இருக்கும்படி கதை அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான சில விளக்கங்களும் கிடைத்துள்ளன. இதில் வரும் வாத்தி என்பது விஜய்யை குறிக்கிறது. ஆக, ‘மாஸ்டர்’ இரு நாய்கன்களுக்கு இடையே நடக்கும் மோதல் திரைப்படம் எனத் தெரியவந்துள்ளது.